முதலமைச்சர் விஜய் எடுத்த சுப்ரீம் பவர்! கரூரில் வீசிய அரசு பணி அரசியல்! திமுக, அதிமுக செய்யாததா

  • சென்னை: "இந்த கரூர் சம்பவமே ஒரு திட்டமிட்ட சதியா அல்லது இயற்கையான விபத்தா என்பது இன்னும் சிபிஐ விசாரணையில் இறுதி செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் அவசரமாக அரசுப் பணி வழங்குவது, எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை பெறுவதற்காகவே திட்டமிட்டு சில சதிச் செயல்களை அரங்கேற்றுவதற்கு கூட வழிவகுத்துவிடும்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    The Gentle man சேனலில் பேசியிருக்கும் சேகுவேரா, "கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டிருப்பது முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு என்பது முற்றிலும் கருணை அடிப்படையிலான ஒன்றாகும்.. அது சட்டப்படியான உரிமை கிடையாது.. அந்த பணியை கட்டாயமாக வழங்கக்கோரி யாரும் நீதிமன்றத்தை அணுக முடியாது.. இதை பல தீர்ப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன. குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் வறுமை நிலை மற்றும் இயலாமையை கண்டு, அதிகாரத்தில் இருப்பவர்கள் தார்மீக அடிப்படையில் எடுக்கும் முடிவுதான் இது.

    Advertisement

    முதலமைச்சரின் சுப்ரீம் பவர்

    அந்தவகையில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு இதில் சுப்ரீம் பவர் இருக்கிறது.. முதலமைச்சர் தனது அதிகார வரம்பை பயன்படுத்தி இந்த ஆணையை வழங்கும்போது, அதை சட்டப்பூர்வமாக தடுத்து நிறுத்துவது கடினமானது.. அதனால்தான் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கோர்ட் உடனடியாக இடைக்காலத் தடை விதிக்கவில்லை.

    இப்போதுள்ள சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் பணியில் இணைந்து ஊதியம் பெறுவதில் எந்த தடையும் இல்லை. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பும் பெரும்பாலும் அரசாங்கத்தின் நிர்வாக முடிவுக்கு ஆதரவாகவே அமைய வாய்ப்புள்ளது. அதிகார அமைப்புகள் தங்களுக்குரிய தனிப்பட்ட அதிகாரப் பலத்தை பயன்படுத்தி எடுக்கும் முடிவுகளை நீதிமன்றங்கள் பொதுவாக ரத்து செய்வதில்லை.

    Advertisement

    திமுக, அதிமுக தந்த கருணை பணி நியமனங்கள்

    எதிர்க்கட்சிகளான திமுக,. அதிமுக ஏன் இந்த விவகாரத்தை கோர்ட்டுக்கு கொண்டு செல்லவில்லை.. காரணம், கடந்த காலங்களில் அவர்களது ஆட்சிக் காலத்திலும் இதே போன்ற விதிகளுக்கு அப்பாற்பட்ட கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் தாராளமாக வழங்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, அதிமுக ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியது. அதுபோலவே நீட் தேர்வு பாதிப்பால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கும் திமுக ஆட்சியில் அரசு வேலை வழங்கப்பட்டது.

    Advertisement

    துப்பாக்கி சூடு விவகாரம்

    இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தூத்துக்குடி துப்பாக்கி சூடு போலீசாரால் நடத்தப்பட்டது, கரூர் சம்பவம் நெரிசலால் ஏற்பட்டது என்று சிலர் பிரித்து பார்க்கிறார்கள். ஆனால், மரணம் எதனால் நிகழ்ந்தது என்பதை விட, பாதிக்கப்பட்ட தரப்பின் இழப்பை மட்டுமே முதன்மையாக வைத்து இத்தகைய உதவிகள் செய்யப்படுகின்றன.

    சாத்தான்குளம் ஜெயராஜின் குடும்பத்திற்கும், அஜித்தின் குடும்பத்திற்கும் இதே அடிப்படையில்தான் வேலை வழங்கப்பட்டது.. முதலமைச்சர் விஜய்யும் இங்கு புதிதாக எதையும் செய்யவில்லை.. கடந்த கால அரசுகளின் நடைமுறையையே பின்பற்றியுள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்திலும் இத்தகைய பாரபட்சங்கள் நடந்துள்ளன.

    Advertisement

    கும்பகோணம் மகாமகம்

    1992ம் ஆண்டு கும்பகோணம் மகாமகக் குளத்தில் கூட்ட நெரிசலில் 53 பேர் உயிரிழந்தனர். ஆனால், உயிரிழந்த அந்த 53 பேரின் குடும்பங்களில் யாருக்கும் அன்று அரசு வேலை வழங்கப்படவில்லை. ஆனால், காஞ்சிபுரம் கோயிலில் படுகொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மகனுக்கு ஜெயலலிதா, அரசுப் பணி வழங்கினார். சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் குற்றம் சாட்டப்பட்டதால், அச்சமூகத்தினரிடமிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பை தணிப்பதற்காகவே ஜெயலலிதா அந்த பணியை வழங்கினார்.

    திமுகவின் வரலாற்றிலும் இதற்கு இணையான நிகழ்வு உண்டு. 1999ம் ஆண்டு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது, போலீசாரின் தடியடிக்கு பயந்து தாமிரபரணி ஆற்றில் விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். அப்போதைய கலைஞர் அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கவில்லை.

    Advertisement

    விஜய் செய்தது சரியா

    17 பேர் இறந்தபோது ஒரு நியாயமும், அனிதா மரணத்தின்போது ஒரு நியாயமும் கடைப்பிடிக்கப்பட்டது ஏன்? உயிரிழந்தவர்கள் அனைவரும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தானே? அந்தவகையில். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியாளர்களின் அரசியல் கணக்குகளுக்கு ஏற்பவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.விஜய்யின் இந்த நடவடிக்கையை நாம் மொத்தமாக சரி என்று சொல்லிவிட முடியாது.

    2004ம் ஆண்டு கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 93 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆனால், அவர்கள் குடும்பத்தில் யாருக்காவது அரசுப் பணி வழங்கப்பட்டதா? புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களாலும், கொரோனா காலத்திலும் அரசின் குறைபாடுகளால் எத்தனையோ பேர் உயிரிழந்திருக்கிறார்களே?

    நிதி நிவாரணம் தந்திருக்கலாமே

    இங்கு எல்லாமே வாக்கு அரசியலுக்காகவும், சாதி அரசியலுக்காகவுமே பெரிதாக்கப்படுகிறது.. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏதாவது ஒரு நன்மை போய் சேர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்த உதவி கண்டிப்பாக அரசுப் பணியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே நிதி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.. தேவைப்பட்டால் கூடுதலான நிதி உதவியை வழங்கியிருக்கலாம். அதை விட்டுவிட்டு அரசு பணியை அவசரமாக வழங்கும்போது, அது வருங்காலத்தில் ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும்.

    கரூர் சம்பவம் சதியா? இயற்கையான விபத்தா?

    இந்த கரூர் சம்பவமே ஒரு திட்டமிட்ட சதியா அல்லது இயற்கையான விபத்தா என்பது இன்னும் சிபிஐ விசாரணையில் இறுதி செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் அவசரமாக அரசுப் பணி வழங்குவது, எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை பெறுவதற்காகவே திட்டமிட்டு சில சதிச் செயல்களை அரங்கேற்றுவதற்கு கூட வழிவகுத்துவிடும்.

    நாளைக்கு வேறொரு கூட்ட நெரிசலிலோ அல்லது அரசுப் பேருந்து விபத்திலோ யாராவது உயிரிழந்தால், அவர்களும் கோர்ட்டை நாடி அரசுப் பணி கோர தொடங்குவார்கள். இது அரசுக்கும் நிர்வாக நிர்பந்தத்தையே ஏற்படுத்தும். அதனால், இந்த சம்பவத்தின் பின்னணி என்னவென்று சிபிஐ விசாரணை முழுமையாக முடிவடைந்து தீர்ப்பு வந்த பிறகு, இந்த அரசு பணியை வழங்கியிருந்தால் அது சரியானதாக இருந்திருக்கும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    English Summary

    Senior journalist Che Guevara examines the controversy surrounding the immediate provision of government jobs to families of the Karur stampede victims. He argues that settling these claims before the CBI investigation concludes sets a dangerous precedent, questioning the political motives behind such hasty administrative decisions amidst ongoing administrative power dynamics.