சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும் என முதல்வர் விஜய் பெருமிதம் பொங்க , அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.
மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்! தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு, இன்று மீண்டும் அவை கூடியது. அப்போது முதல்வர் விஜய், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என தனித்தீர்மானத்தை விஜய் கொண்டு வந்தார். அப்போது சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்றே. அதை யாரும் மறுக்க முடியாது. உலகில் உள்ள எல்லா மொழிக்கும் இது பொருந்தும், அதையும் மறுக்க முடியாது. ஆனால் தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல. தமிழ் நமது உயிர். நமது உணர்வு. நம்மை பெற்ற தாயை அம்மா என்று சொல்லும்போது பாசம், சொந்தமும் நம்மை அறியாமலே நமக்குள் உயிராக, உணர்வாக தோன்றுவதுபோல, தமிழும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. தாய் எப்படி மிகப்பெரிய புனிதமோ அதுபோல தான் தாய் மொழியும். நம் தாய் நமக்கு மிகப் பெரிய புனிதம் என்றால் நம் எல்லாருக்குமான தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும். தாயை போற்றுகிற வாழ்த்துகிற தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விட முடியும், விடவும் மாட்டோம். நமது தமிழ்த்தாய் வாழ்த்து 1891-ல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம் தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாக பாடினார். தமிழ் என்றால் விருந்தொம்பல். சுருக்கமாக சொன்னால், தமிழ் என்றால் கெத்து. தமிழ் என்றால் பவர். அந்த தமிழோட புகழை கூறும் தமிழ்த்தாய் வாழ்த்தில் அனைத்துலகும் இன்பமுற என்று சொல்லி உலகத்தையே நம் தமிழ் உயர்த்தி பிடிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து எந்த மொழி, மதம், இனத்தையும், எந்த தனி மனிதனையும் தாழ்த்தி பேசவில்லை. கொஞ்சமும் காயப்படுத்தவில்லை. இவ்வாறு விஜய் தெரிவித்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சியினரும் ஆதரித்தனர்.
தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்! இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.