தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம்.. சட்டசபையில் விஜய் விரைவில் முக்கிய அறிவிப்பு

  • சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடரிலேயே புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்டத்தை முதல்வர் விஜய் முறைப்படி அறிவிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் நிலவும் கடும் இடநெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. முன்னதாக ஜெயலலிதா மற்றும் மு.கருணாநிதி ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தமிழக அரசால் முன்னெடுக்கப்படும் மூன்றாவது பெரும் முயற்சி இதுவாகும்.

    Advertisement

    பரிசீலனையில் உள்ள உத்தேச இடங்கள்

    புதிய தலைமைச் செயலக வளாகத்திற்கான இறுதி இடம் இதுவரை அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படவில்லை என்றாலும், பட்டினப்பாக்கம் மற்றும் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளை தமிழக அரசு உன்னிப்பாகப் பரிசீலித்து வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பு நடப்பு கூட்டத்தொடரிலேயே சட்டப்பேரவையில் வெளியாகும் என அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதிய தலைமைச் செயலக வரலாறு: இரண்டு முன்னைய முயற்சிகள்

    சென்னையில் தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்ய முற்பட்டதற்கு நீண்டதொரு அரசியல் பின்னணி உண்டு.

    2003 ஜெயலலிதா அறிவிப்பு: அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, ராணி மேரிக் கல்லூரி வளாகத்தை இடித்துவிட்டு அங்கு புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். எனினும், மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடுமையான தொடர் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளின் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

    Advertisement

    ஓமந்தூரார் வளாக முயற்சி: பின்னர் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு. கருணாநிதி, ஓமந்தூரார் அரசு தோட்ட வளாகத்தில் பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை கட்டித் திறந்து வைத்தார். ஆனால், 2011-ல் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைந்ததும், அந்த புதிய கட்டடம் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு, நிர்வாகம் மீண்டும் பழைய புனித ஜார்ஜ் கோட்டைக்கே திரும்பியது.

    நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாறும் CMO

    புதிய தலைமைச் செயலகக் கட்டடம் அமைப்பது தொடர்பான நீண்டகாலத் திட்டம் ஒருபுறம் தயாராகி வரும் நிலையில், முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.

    Advertisement

    பொதுப்பணித்துறை மூலம் புதுப்பிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர், அவரது செயலாளர்கள், சிறப்புப் பணி அதிகாரிகள் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவு ஆகிய முக்கிய பிரிவுகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் 10-வது தளம் மாற்றியமைக்கப்படுகிறது. வங்காள விரிகுடா கடலைப் பார்க்கும் வகையில் கிழக்குப் பார்த்த அமைப்பில் முதலமைச்சரின் பிரதான அறை அமைய உள்ளது.

    இந்த உள் கட்டமைப்பு பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்துவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. வரும் டிசம்பர் முதல் வாரத்திற்குள் முதலமைச்சர் அலுவலகம் இங்கிருந்து செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    பணியாளர்கள் மாற்றம் மற்றும் நடைமுறை நிலைமை

    முதலமைச்சர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதால், அதை ஒட்டியுள்ள பிற துறை ஊழியர்களின் பணிகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. இதனால் சில அலுவலகங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 10-வது தளத்தில் முதலமைச்சர் அலுவலகம் அமைய உள்ள போதிலும், தலைமைச் செயலக வளாகத்தை விட்டு வெளியே எந்த ஓர் அலுவலகமும் மாற்றப்படவில்லை. முதலமைச்சர் அலுவலகத்திற்கு மிக அருகாமையில் உள்ள அலுவலகங்கள் மட்டுமே புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள்ளேயே வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்படும்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

    Advertisement

    புதிய வளாகத் திட்டம் மற்றும் தற்போதைய CMO இடமாற்றம் என இரண்டு பெரும் நிர்வாக முன்னெடுப்புகளையும் விஜய் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

    English Summary

    CM Vijay to Announce Mega Plan for New Tamil Nadu Secretariat