சென்னை: சென்னையில் 2ஆம் கட்டமாக 750 ஏசி மின்சார பேருந்துகளை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். ஏற்கெனவே முதல்கட்டமாக பேருந்துகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்த விஜய், அந்த பேருந்தில் பயணம் செய்தார்.
சென்னையில் வாகன நெரிசல் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசை குறைக்க சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ 697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பேருந்துகள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை, தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து 2ஆம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் ஆலந்தூர், சென்ட்ரல் பணிமனை-2 , பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே கே நகர், அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் முதலில் ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த மின்சார பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவர் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு, சாம்பல் நிற சட்டை அணிந்திருந்தார். கடந்த முறை மின்சார பேருந்துகளை தொடங்கி வைத்த போது அவர் அந்த பேருந்தில் ஏறி பயணம் செய்தார். அப்போது டிரைவர், கன்டக்டரிடம் நலம் விசாரித்தார். இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த அனைவரும் டிக்கெட் எடுத்தனர். விஜய்யும் சில்லறை கொடுத்து டிக்கெட் எடுத்தார். இது வைரலானது. அது போல் வழியெங்கும் நின்றிருந்த மக்களின் அன்பு, ஆரவாரத்தை வீடியோ எடுத்து மகிழ்ந்தார்.