சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக முதல்வர் விஜய் நேரடியாக மீனவப் பிரதிநிதிகளையும் அப்பகுதி மக்களையும் சந்தித்துப் பேச உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 26 ஏக்கர் நிலப்பரப்பில், ₹1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் கட்டப்படும் என்ற அரசின் அரசாணை வெளியான நாள் முதல், கடலோரப் பகுதிகள் கொந்தளித்துக் கிடக்கின்றன. "எங்கள் வாழ்வாதாரத்தை அழித்து இந்த ஆடம்பரம் தேவையா?" என்று முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் திரண்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் விதித்த கெடுவும் நெருங்கி வரும் சூழலில், முதலமைச்சர் விஜய் நேரடியாக மீனவப் பிரதிநிதிகளையும் அப்பகுதி மக்களையும் சந்தித்துப் பேசி அவர்களது மனதை மாற்ற முயற்சி செய்யவுள்ளார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆனால், இந்தச் சந்திப்பு எளிய மக்களின் வேதனையைக் கேட்டு முடிவை மறுபரிசீலனை செய்வதற்காகவா அல்லது கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களைத் திசைதிருப்பவா என்ற பலத்த கேள்விகள் எழுந்துள்ளன. தேர்தல் பிரச்சாரக் களத்தில் நின்றபோது, "தமிழ்நாடு கடுமையான கடன் சுமையில் தத்தளிக்கிறது.. முந்தைய அரசின் தவறான நடவடிக்கைகளால் கஜானா காலியாகிவிட்டது.. மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க விடமாட்டோம்" என்று ஆவேசமாகப் பேசியவர் இன்றைய முதலமைச்சர் விஜய். அந்தப் பேச்சை நம்பி வாக்களித்த மக்களுக்கு, ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே அடுத்தடுத்து பேரதிர்ச்சிகள் காத்திருந்தன. கடன் சுமை என்று சொல்லிக்கொண்டே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.எல்.ஏ) அரசு செலவில் புதிய கார்களைப் பரிசாக வழங்குவது, பராமரிப்புப் படி கொடுப்பது போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து, நாமக்கல் கவிஞர் மாளிகையின் மேல் தளங்களில் முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஏற்கனவே இயங்கி வரும் புனித ஜார்ஜ் கோட்டையை விட்டுவிட்டு, பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடி பிரம்மாண்ட செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடமே சுமார் ₹900 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், நிதி நெருக்கடி என்று சொல்லும் ஒரு மாநில அரசு எதற்காக ₹1,200 கோடியில் இவ்வளவு பிரம்மாண்டமான கட்டிடத்தைக் கட்ட வேண்டும் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக முன்வைக்கின்றன. பட்டினப்பாக்கம் மெரினா லூப் சாலை என்பது மீனவப் பெண்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. கடலுக்குச் சென்று படகுகளில் மீட்டு வரும் மீன்களை அப்பெண்கள் சாலையோரக் கடைகளில் வைத்து விற்பனை செய்கிறார்கள். இது சென்னை மாநகரத்தின் முக்கிய உணவு அடையாளமாகவும் விளங்குகிறது. தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அந்த இடம் அதிஉயர் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிடும். முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் அணிவகுக்கும் பாதையாக அது மாறும். இதனால் வி.ஐ.பி பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டு, சாலையோர மீன் விற்பனைக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படும் சூழல் உருவாகும். ஏற்கனவே லூப் சாலையில் மீன் கடைகளை அகற்ற மாநகராட்சியும் காவல்துறையும் பலமுறை முயன்றுள்ள நிலையில், அதிகாரமையமே அருகில் அமையும்போது மீனவர்களின் வாழ்வாதாரக் கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டுவிடும். மீனவர்களுக்குக் கடல் என்பது வெறும் தொழில் தளம் அல்ல; அது அவர்களின் பூர்வீக வாழ்விடம். கடற்கரை மணல்வெளியில்தான் படகுகளை நிறுத்துகிறார்கள், வலைகளைப் பின்னிப் பழுதுபார்க்கிறார்கள், மீன்களைக் காயவைக்கிறார்கள். இப்போது முதலமைச்சரின் வீடு அந்தப் பகுதிக்கு மிக அருகில் அமைந்திருப்பதாலேயே பல கெடுபிடிகளைச் சந்தித்து வருவதாக மக்கள் கூறுகிறார்கள். சுதந்திர தினம் போன்ற அரசு விழாக்கள் நடக்கும் நேரங்களிலோ அல்லது முக்கியப் பிரமுகர்கள் வரும்போதோ, "கடலுக்குள் செல்லாதீர்கள்" என்று மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினர் வாய்மொழி உத்தரவு பிறப்பிப்பதாக மீனவர்கள் குமுறுகிறார்கள். நாளை அந்த இடத்தில் சுமார் 15 அடுக்கு மாடி தலைமைச் செயலகமும், சட்டமன்றமும் வந்துவிட்டால், கடலுக்குச் செல்லும் வழிகளெல்லாம் பாதுகாப்புத் தடுப்புகளால் அடைக்கப்படும். "பாதுகாப்புக் காரணங்கள்" என்று ஒற்றை வார்த்தையைச் சொல்லி, மீனவர்களைத் தங்களது சொந்த நிலத்திலிருந்தே அப்புறப்படுத்தி கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற தொலைதூரப் புறநகர்ப் பகுதிகளுக்கு விரட்டி விடுவார்களோ என்ற அச்சம் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது. மக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த விஸ்வரூப எதிர்ப்பையும், தொடர் ஆலோசனைக் கூட்டங்களையும் கவனித்த முதலமைச்சர் விஜய், விரைவில் பட்டினப்பாக்கம் பகுதி மீனவப் பிரதிநிதிகளையும் குடும்பங்களையும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தச் சந்திப்பு எதற்காக? நிலத்தின் உண்மை நிலவரத்தை உணர்ந்து திட்டத்தை கைவிடவா? அல்லது வழக்கமான அரசியல் பாணியில் கவர்ச்சிகரமான நலத்திட்டங்கள், புதிய அடுக்குமாடி வீடுகள், நவீன மீன் அங்காடி அமைத்துத் தருதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கி மக்களின் எதிர்ப்பைக் கரைத்துவிடவா என்ற சந்தேகம் களத்தில் எழுந்துள்ளது. "எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்து கடலோடு வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குத் தேவை நவீன கட்டிடங்கள் அல்ல; கடல் அன்னை தந்த உரிமையும் எங்களது தொழிலும் தான். எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தவோ, எங்கள் வாழ்வாதாரத்தை முடக்கவோ விடமாட்டோம்" என்று அப்பகுதி மக்கள் ஆணித்தரமாகத் தெரிவிக்கிறார்கள். ஆட்சிக்கு வரும் முன் எளிய மக்களின் குரலாக ஒலித்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரத்தின் குரலாக மாறிவிடக் கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருபுறம் நிதி பற்றாக்குறை என்று சொல்லிவிட்டு, மறுபுறம் எம்.எல்.ஏ.க்களுக்குகார்கள், பல நூறு கோடிகளில் ஆடம்பரக் கட்டிடங்கள் என வரிப்பணம் செலவழிக்கப்படுவதை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அடித்தட்டு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கிவிட்டு உருவாக்கப்படும் எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் மக்களுக்கான திட்டமாக இருக்க முடியாது. வெறும் சந்திப்புகளாலும், சமாதானப் பேச்சுகளாலும் மீனவ மக்களின் வாழ்வுரிமையை மாற்றிவிட முடியாது. மக்களின் கண்ணீரையும் உணர்வுகளையும் மதித்து, இந்தத் திட்டத்தை கைவிட்டு மாற்று இடத்தைத் தேர்வு செய்வாரா முதலமைச்சர் விஜய் என்பதை வரவிருக்கும் நாட்கள் தெளிவாக உணர்த்தும்.மேடைப் பேச்சும் நடப்பு அரசியலும்: முன்னுக்குப் பின் முரணான முடிவுகள்
மீனவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? மக்களின் நியாயமான அச்சங்கள்
பாதுகாப்பு கெடுபிடிகள்: கடலுக்கே செல்ல முடியாத நிலை வருமா?
மக்களை சமாதானப்படுத்த சந்திப்பா? அல்லது முடிவை மாற்றவா?
முடிவு எங்கே நிற்கும்?