எங்க ஐயாவுக்கு நான்தான் செய்வேன்.. நடிகர் திலகத்துக்காக சிஎம் விஜய் சொன்ன வார்த்தை! நெகிழ்ந்த பிரபு!

  • சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் வரலாறு மிகப்பெரிய விழாவாக நடத்தபடும் எனவும், அதனை விஜய்யே முன்னின்று நடத்தித் தருவதாகக் கூறியிருக்கும் நிலையில், அந்த நாளை மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியுள்ளதாக நடிகரும், சிவாஜி கணேசனின் மகனுமான பிரபு உருக்கமாக கூறியுள்ளார்.

    Advertisement

    நடிகர் சிவாஜிகணேசனின் 25ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி நினைவு மண்டபத்தில் அமைச்சர் ராஜ்மோகன், பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    Advertisement

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு," நடிகர் திலகம் எனது தந்தை சிவாஜி கணேசனின் 25ஆம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு நன்றி. அமைச்சர் ராஜ்மோகன் என் வேண்டுகோளுக்காக இங்கு வந்திருக்கிறார் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    2028ம் ஆண்டு சிவாஜி கணேசன் நூற்றாண்டு வருகிறது.முதலமைச்சர் விஜய் முன் நின்று நடத்துகிறேன் என தெரிவித்திருக்கிறார் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில்,"நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எங்கள் கொள்கை தலைவர் காமராஜரின் பக்தர். முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்நாள் நண்பர். கலைத்துறையின் பிதாமகன் சிவாஜி கணேசன். பாரதியார், வ.உ.சி, கர்ணன் போன்றோரை பார்த்ததில்லை சிவாஜி ஐயாவால் பார்த்திருக்கிறோம்.

    Advertisement

    கர்ணன் யார் என்று நாங்கள் நேரில் பார்த்தது இல்லை. அதனை கண்ணெதிரே காட்டியவர் சிவாஜி கணேசன். சிவாஜி அவர்களின் நூற்றாண்டு, பொன்னெழுத்தக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. வரலாறு சினிமா பெருமை கொள்வது போல் சரித்திரம் வியக்கும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மிகப்பெரிய விழாவாக நடத்தபடும். இது பெருமையல்ல. இது எங்கள் கடமை என தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான்," பூவுலகம் இருக்கும் வரை அனைத்து நடிகர்களுக்கும் ஏதோ ஒரு சிவாஜியின் உடல்மொழி இருக்கும். சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இலக்கணமாக இருக்கிறார். அவரது படங்கள் எல்லாம் காவியங்கள் காப்பியங்கள். இந்த நிமிடம் வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" என தெரிவித்தார்.

    English Summary

    Actor Prabhu says CM Vijay has assured him of personally organizing Sivaji Ganesan’s centenary celebrations in 2028.