விஜய் முக்கிய விஷயத்தை கையில் எடுக்கும் CM.. கூடவே இருக்கும் CTR நிர்மல் குமார்! கோட்டையில் பரபரப்பு

  • தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மாநில மின்சாரத் துறையின் தற்போதைய நிதி நிலையை விரிவாக மதிப்பீடு செய்ய இன்று ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) மற்றும் அதன் துணை நிறுவனங்கள் தற்போது பெரும் நிதி நெருக்கடியில் இருப்பதால் இந்தக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் அதிகப்படியான மின் தடையும், மின் வெட்டும் ஏற்பட்டு மக்களை பாதித்து வரும் வேளையில் இக்கூட்டம் நடக்கிறது. இதேவேளையில் தமிழ்நாடு மின்சாரத் துறை பெறும் வருமானத்தை விட அதிக செலவு செய்வதால், ஆண்டுதோறும் கடன் பாரம் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் விஜய் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார்.

    Advertisement

    புதிய மின்சார அமைச்சரின் முதல் பெரிய சவால்

    சமீபத்தில் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு இது முதல் பெரிய சவாலாக அமைந்துள்ளது. இன்று நடக்கும் கூட்டத்தில் தமிழ்நாட்டின் மின்சார விநியோகம், மின் உற்பத்தி, மின் பரிமாற்றம் மற்றும் பசுமை எரிசக்தி துறை அதிகாரிகள் பங்கேற்று விரிவான அறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளனர்.

    இதோடு இக்கூட்டத்தில் அரசு மின்சார துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் அளவு, தற்போதைய செலவு, வருமானம் மற்றும் அரசிடமிருந்து தேவைப்படும் மானிய உதவி ஆகியவை குறித்து முழுமையான விவரங்கள் தாக்கல் செய்யப்படும்.

    Advertisement

    ஒரு ஆண்டு மட்டும் வெயிட் பண்ணுங்க

    இன்று காலையில் மின்சார அமைச்சர் நிர்மல்குமார் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இதுவரை அனுபவிக்காத வகையில் வேகமான மற்றும் சுறுசுறுப்பான ஆட்சியை தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் காணப் போகிறார்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

    இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழ்நாட்டில் புதிய அரசுத்துறை, புதிய பணிமுறை உருவாகும் என்றும், அர்ப்பணிப்புடன் செயல்படும் அமைச்சர்களையும், முழு நேர மக்கள் பணியில் ஈடுபடும் முதலமைச்சரையும் மக்கள் நேரடியாகக் காண்பார்கள் என்றும் நிர்மல்குமார் அடித்து கூறியுள்ளார்.

    மின்சார வாரியத்தின் கடன் சுமை

    தமிழ்நாடு மின்சார விநியோகக் கழகம் (TNPDCL) மட்டும் நீண்டகால மற்றும் குறுகியகாலக் கடன்களைச் சேர்த்து 1.98 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொறுப்புகளைச் சுமந்து வருகிறது. மின் உற்பத்தி நிறுவனத்தின் கடன் அளவும் பெரிதாக உள்ளது. இதனால் மின்சாரத் துறை முழுவதும் கடன் மற்றும் கடன் வட்டியை செலுத்துவதின் மூலம் இயங்கும் நிலை உருவாகியுள்ளது.

    Advertisement

    மேலும் 2025-26 நிதியாண்டில் TNEB-யின் கடன் அளவு 6 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர். தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சார கொள்முதல்

    தமிழ்நாட்டில் மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை காலம் மற்றும் உச்சப் பயன்பாட்டு நேரங்களில் தேவையை சமாளிக்க தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதேவேளையில் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழிற்துறையின் காரணமாகவும் மின்சார தேவை அதிகரித்துள்ளது.

    ஆனால் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கும் மின்சாரத்தின் விலை அதிகமாக இருப்பதால் மின்சார வாரியத்தின் செலவு பெருமளவு உயர்கிறது. இந்தச் செலவு அதிகரிப்பு தான் துறையின் நிதி நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துகிறது.

    Advertisement

    ஜூலை 1 முதல் மின்சாரக் கட்டண திருத்தம்

    ஜூலை 1-ம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் திருத்தம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 2022-2027 காலகட்டத்துக்கு ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள தானியங்கி கட்டண திருத்த முறையின்படி, எரிபொருள் செலவு, சம்பளம், பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு செலவுகள் உயரும் போது மின்சாரக் கட்டணமும் சரிசெய்யப்படும். கடந்த ஆண்டு மின் கட்டணம் சுமார் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஆனால் வீட்டு நுகர்வோருக்கு பெரிய அளவில் கூடுதல் சுமை ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இந்த ஆண்டும் கட்டண உயர்வு தேவையா, அது நுகர்வோர், தொழில்துறை மற்றும் அரசின் நிதி நிலையை எப்படி பாதிக்கும் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். மின்சாரத் தேவை போக்கு, ஊழியர் பிரச்சினைகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய மின் உள்கட்டமைப்பு திட்டங்களின் நிலை ஆகியவையும் மதிப்பீடு செய்யப்படும்.

    English Summary

    Tamil Nadu Chief Minister C Joseph Vijay is set to chair a crucial meeting to review the Tamil Nadu Electricity Board’s severe financial crisis, marked by liabilities exceeding ₹1.98 lakh crore and rising costs from private power purchases. With newly appointed Electricity Minister CTR Nirmal Kumar facing his first major challenge