சென்னை: தமிழ்நாட்டில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, எதிர்க்கட்சியான திமுகவின் முக்கியத் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தொடர் சோதனைகளும் வழக்குகளும் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
எ.வ. வேலு, செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு என நீண்டு வந்த இந்த பட்டியல், தற்போது முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை வந்து நின்றுள்ளது. ஆனால், இந்தத் தொடர் நடவடிக்கைகள் எந்தவொரு திடமான ஆதாரத்தின் அடிப்படையில் நடப்பதாகத் தெரியவில்லை; மாறாக, எந்த இலக்கும் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு எறியப்படும் அம்புகளைப் போலவும், அரசியல் விரக்தியின் வெளிப்பாடாகவும் மட்டுமே பார்க்க முடிகிறது என்ற விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.
பொதுவாக ஒரு அரசு அல்லது விசாரணை அமைப்பு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அதில் ஒரு முறையான திட்டமும், உறுதியான வழக்கும் இருக்கும். ஆனால் தவெக அரசின் அணுகுமுறையோ 'சா பூ திரி' விளையாட்டு போல, ஒவ்வொரு வாரமும் ஒரு தலைவரைத் தொட்டுப் பார்க்கும் விநோதமான நாடகமாக மாறியுள்ளது. முதலில் ஒருவர் மீது குற்றம்சாட்டுவது, ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது, ஆனால் அந்த வழக்கில் எந்தவொரு சட்டரீதியான முடிவையும் எட்டாமல், அடுத்த சில நாட்களிலேயே இன்னொரு தலைவர் மீது பார்வையைத் திருப்புவது என ஒரு சுழல் வட்டத்தில் இந்த அரசியல் நகர்கிறது. ஒரே வழக்கை முழுமையாக நிரூபிக்க முடியாத பலவீனத்தை மறைக்கவே, புதுப்புது முகங்களை நோக்கி விசாரணை அமைப்புகள் திருப்பப்படுகின்றன என்ற குரல் பொதுமக்களிடையேயும் எழத் தொடங்கியுள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும்போது மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதே ஒரு நல்ல தலைவரின் தலையாய கடமை. ஆனால், தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் சூழலோ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வரும் அவலம், பட்டினப்பாக்கம் மீனவர்களின் தொடர் போராட்டங்கள், பல அடிப்படை விவகாரத்தில் நியாயம் கேட்டுத் தலைமைச் செயலகம் வரை வந்து நிற்கும் மக்களின் கண்ணீர், ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆவின் பாலின் கடுமையான தட்டுப்பாடு எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இவை ஒருபுறமிருக்க, ராமநாதபுரம் இரட்டைக் கொலை, சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம் எனச் சட்டம்-ஒழுங்கும் சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. இத்தனை அவலங்களைச் சரிசெய்யத் துப்பில்லாத ஒரு நிர்வாகம், மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் போது கையில் எடுக்கும் எளிமையான ஆயுதம்தான் இந்த "ரெய்டு அரசியல்". லண்டனில் ஷூட்டிங் ஒருபக்கம் நடக்க, இங்கே மக்களின் கவனத்தை மாற்றும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளின் பூட்டை உடைக்கப் போலீசாரை அனுப்புவது அரசியல் முதிர்ச்சியின்மைக்குச் சிறந்த உதாரணம். கொள்கையோ, மக்களுக்கான நீண்டகாலத் திட்டங்களோ இல்லாதபோது சத்தம் மட்டுமே அரசியலாகிவிடும். தவெக முன்னெடுக்கும் இந்த அணுகுமுறை முழுக்க முழுக்க 'சத்தத்தை' மட்டுமே நம்பி இருக்கிறது; அதில் எந்தவிதமான 'உண்மையும்' இல்லை. மக்கள் தங்களுக்கு வாக்களித்தது புதிய நிர்வாக மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆனால், முந்தைய தவறுகளைச் சுட்டிக்காட்டி பழிவாங்குவதையும், அடுத்தடுத்து நபர்களை மாற்றி மாற்றி மிரட்டுவதையும் மட்டுமே வேலையாகக் கொண்டிருப்பது, வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாகும். உண்மையில் ஒரு தலைவரின் மீது ஊழல் புகார் இருந்தால், அதைச் சட்டத்தின் முன் முறைப்படி நிறுவி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து, அரசு நிர்வாகத்தின் தோல்விகள் வெளிச்சத்திற்கு வரும்போதெல்லாம் ஒரு முன்னாள் அமைச்சரின் பெயரை இழுத்துப் போடுவது, இந்த அரசிடம் கையில் பிடிப்பதற்கு எந்த ஒரு திடமான வழக்கும் இல்லை என்பதை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் மீது பாயும் இந்த ரெய்டு அஸ்திரங்கள் தற்காலிகமாகச் செய்திகளில் தலைப்புச் செய்திகளை உருவாக்கலாமே தவிர, சமையலறையில் பால் இல்லாமல் தவிக்கும் தாயின் கோபத்தையோ, இருட்டில் புழுங்கித் தவிக்கும் சாமானியனின் ஆதங்கத்தையோ தணித்துவிட முடியாது. அரசியல் பழிவாங்கல்களைக் கடந்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்தத் தவறினால், இந்த அரசியல் நாடகத்தை மக்கள் விரைவில் முற்றிலுமாக நிராகரிப்பார்கள் என்பது நிச்சயம்.இலக்கு மாறி மாறி பாயும் அஸ்திரங்கள்
மக்கள் பிரச்சனைகளை மறைக்க திசைதிருப்பல் நாடகமா?
அரசியல் மேடை நாடகமும் உண்மை நிலவரமும்