“முடியவே முடியாது”.. திமுகவினர் பேச வாய்ப்பு தருமாறு முதல்வர் விஜய் கூறியும் அனுமதி மறுத்த சபாநாயகர்

  • சென்னை: திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதல்வர் விஜய் பேசிய நிலையில், அதற்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். முதல்வர் விஜய்யும் சபாநாயகரிடம் வாய்ப்பு கொடுங்க என்று கூறினார். ஆனால், திமுகவினர் பதில் அளிக்க அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. இன்று அதற்கான பதிலுரையை முதல்வர் விஜய் பேரவையில் ஆற்றினார்.

    Advertisement

    முதல்வர் விஜய் பேச்சு

    முதல்வர் விஜய் பேசும்போது, திமுகவினரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களைப் பட்டியலிட்டார். சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அமலாக்கத்துறை கடிதம் என திமுக ஆட்சியில் ஊழல்கள் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுப் பேசினார் முதல்வர் விஜய்.

    திமுக கடும் எதிர்ப்பு

    இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பேசிக்கொண்டிருந்தபோதே திமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் இருந்து எழுந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு குரலைப் பார்த்துச் சிரித்தவாறே முதல்வர் விஜய் தனது பதிலுரையை முடித்த நிலையில், திமுக தரப்பில் பேச வாய்ப்பு கோரப்பட்டது. திமுகவினரைப் பேச அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.

    Advertisement

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும், சபாநாயகர் இருக்கைக்கு முன் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக நின்று, முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு பதில் அளிக்க வாய்ப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    சபாநாயகர் திட்டவட்டம்

    இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "உங்கள் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுகிற இடம் இது அல்ல; நான் அப்படிப்பட்ட ஆளும் இல்லை, அனுமதிக்க முடியாது. முதல்வர் பேசும்போது நீங்கள் அமைதியாக இருந்திருந்தால், இப்போது உங்களை பேச அனுமதித்திருப்பேன். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், நேரலையிலும் சென்று கொண்டிருக்கிறது. யார் யார் எப்படி என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.

    Advertisement

    முதலமைச்சர் எப்போது பேசுவார், எப்போது பேசுவார் என்று கேட்டீர்கள். முதல்வர் பேசினார். அவர் பேசும்போது நீங்கள் அமைதியாக இருந்திருந்தால் நான் வாய்ப்பு கொடுத்திருப்பேன். ஆனால், அவர் பேசுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே நீங்கள் வந்ததாக எனக்குத் தோன்றியது. அதனால் நீங்கள் பேச நான் அனுமதிக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.

    அவை முன்னவரும், அமைச்சருமான செங்கோட்டையன் பேசுகையில், "திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் காலையிலிருந்து முதல்வர் பேசுவதற்குத் தடையாகவும், தொடர்ந்து சட்டமன்ற விதிகளுக்கு மாறாகவும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

    Advertisement

    சபாநாயகரிடம் சொன்ன முதல்வர் விஜய்

    இதைத்தொடர்ந்து, சபாநாயகர் இருக்கை முன்பு கூடியிருந்த திமுக எம்.எல்.ஏக்கள் சிலர் முதல்வர் விஜய்யிடமே பேச அனுமதி அளிக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். முதல்வர் விஜய்யும் சபாநாயகரிடம் திமுகவினர் பேச வாய்ப்பு கொடுங்க என்று கூறினார்.

    ஆனால், முதல்வர் விஜய் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக கூறினார் சபாநாயகர். அனுமதி அளிக்க முடியாது என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    English Summary

    While Chief Minister Vijay was leveling a series of allegations against the DMK, party members staged a dharna, insisting on being granted permission to respond. CM Vijay also urged the Speaker to give them a chance. However, Speaker JCD Prabhakar categorically refused to grant permission for the DMK members to reply.