ஸ்டாலின் முத்திரையை அழிக்கும் விஜய்? லெகசியே இருக்க கூடாது.. அடுத்தடுத்து பெயர் மாற்றம் ஏன்?

  • சென்னை: தமிழக அரசியல் களத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்போதெல்லாம், முந்தைய அரசின் திட்டங்களின் பெயர்களை மாறுவது புதிதல்ல.. ஆனால், தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல முக்கிய நலத்திட்டங்களின் பெயர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருவது மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    திமுக ஆட்சியின் அரசியல் முத்திரை திட்டங்களாகவும், மு.க.ஸ்டாலினின் அரசியல் லெகசியை உயர்த்தும் விதமாகவும் அமைந்த பல திட்டங்களை, தவெக அரசு மாற்றி ரீ பிராண்டு செய்து வருகிறது. ஸ்டாலினின் அரசியல் லெகசியை தொடர விடாமல், அரசின் திட்டங்களை வேறு பெயர்களுக்கு மாற்றுவதே விஜய்யின் பிரதான வியூகமாகப் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    பெயர் மாற்றம் செய்யப்பட்ட முக்கிய திட்டங்கள்:

    முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் டூ பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்

    கடந்த திமுக ஆட்சியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக மு.க.ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்', தற்போது 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பள்ளிக் கல்வியில் மதிய உணவுத் திட்டத்திற்கு அடித்தளமிட்ட காமராஜரின் பெயரைச் சூட்டியதோடு மட்டுமல்லாமல், இத்திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் என்ற லெகசி உருவாகாமல் தடுக்க விஜய் இப்படி செய்வதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

    Advertisement

    மகளிர் விடியல் பயணம் டூ மகளிர் பயணம்

    2021 தேர்தல் பிரசாரத்தில் திமுகவின் முதன்மை முழக்கமாக இருந்தது 'விடியல்'. ஆட்சி அமைந்ததும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்திற்கு 'மகளிர் விடியல் பயணம்' எனப் பெயரிடப்பட்டது. தற்போது தவெக அரசு, அதில் இருந்த அரசியல் முத்திரையான 'விடியல்' என்ற வார்த்தையை நீக்கி, எளிய முறையில் 'மகளிர் பயணம்' என மாற்றியுள்ளது. இலவசப் பயணச் சலுகை தொடர்ந்தாலும், திமுகவின் தேர்தல் பிரசாரச் சொல் பேருந்துகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

    நான் முதல்வன் டூ திறன் தமிழ்நாடு

    மு.க.ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில், இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டம், 'திறன் தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரசாரத் தொனியைத் தவிர்த்து, எதையும் குறிப்பிடாமல் இருக்கும் வகையில் இந்தப் பெயர் மாற்றம் அமைந்துள்ளதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    Advertisement

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்

    திமுகவின் முகவரித் திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்', ரூ.1,000 நிதியுதவியை நேரடியாகப் பயனாளிகளுக்குக் கொண்டு சேர்த்தது. இத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், கட்சிக் சார்பற்ற பொதுப் பெயராக மாற்ற தவெக அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு மதிப்புமிகு மகளிர் திட்டம் என்று மாற்ற பரிசீலனை நடக்கிறது.

    அரசியல் விமர்சனங்களும் தவெகவின் வியூகமும்:

    இந்த தொடர் பெயர் மாற்றங்களுக்கு திமுக கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. திட்டங்களின் பெயர்களை மாற்றுவதால் மட்டுமே பயனாளிகளின் மனதில் இருக்கும் நன்றியையும், திட்டத்தின் தாக்கத்தையும் அழித்துவிட முடியாது என்று திமுக தரப்பு விமர்சனம் செய்து வருகின்றன.

    Advertisement

    இருப்பினும், தவெக வட்டாரங்கள் இதை வேறு கோணத்தில் நியாயப்படுத்துகின்றன. அரசுத் திட்டங்கள் என்பது மக்களின் வரிப் பணத்தில் செயல்படுத்தப்படுபவை. அவற்றில் குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களோ அல்லது தேர்தல் முழக்கங்களோ இடம்பெறக் கூடாது. மக்கள் பணத்தில் இயங்கும் திட்டங்களுக்குப் பொதுவான பெயர்களும், வரலாற்றுத் தலைவர்களின் பெயர்களுமே பொருத்தமானவை.. என்பதே முதலமைச்சர் விஜய்யின் நிலைப்பாடாக உள்ளது.

    திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியின் அடையாளங்களை மெல்ல மெல்ல மறைத்து, தனது சொந்த நிர்வாக முத்திரையைப் பதிக்கும் விஜய்யின் இந்த அரசியல் நகர்வுகள், தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.

    English Summary

    CM Vijay vs Stalin: TVK Govt Rebrands DMK-Era Welfare Schemes