விமான நிலையத்தில் சுமார் 1.30 மணி நேரம் காத்திருந்து பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த விஜய்!

  • சென்னை: சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி. டெல்லி புறப்பட்ட பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் விமான நிலையத்தில் சுமார் 1.30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து வழியனுப்பி வைத்தார்.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடி, பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில், சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்கள் அடிக்கல் நாட்டுதல், முடிந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்காக இன்று சென்னை வருகை தந்தார். டெல்லியிலிருந்து சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் வரவேற்றார்.

    Advertisement

    இன்று காலை 11 மணி அளவில் சென்னை வந்த பிரதமர் மோடி, ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது பாஜகவினர் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    இதனை ஏற்ற பிரதமர் மோடி, சுமார் 11.30 மணி அளவில் சென்னை போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் ஒரே மெட்ரோ ரயிலில் இணைந்து பயணம் செய்தனர். ரயிலில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த காட்சிகள் கவனம் பெற்றன.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து நண்பகல் 12.15 மணி அளவில் சென்னை ஐஐடி அருகே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு, சென்னை ஐஐடியில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, பிற்பகல் 1.30 மணி அளவில் கிண்டி வித்யாலயா மைதானத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், பங்கேற்று சுமார் ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழகத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியை சுமார் 1.30 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்து வழியனுப்பி வைத்தார் முதல்வர் விஜய்.

    Advertisement

    பிரதமர் மோடியை வழியனுப்பி வைப்பதற்காக 3.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார் முதல்வர் விஜய். பிரதமர் மோடி வருவதற்கு தாமதமானது. பிரதமர் மோடி, 5 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அதுவரை, விமான நிலையத்திலேயே காத்திருந்தார் முதல்வர் விஜய்.

    தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் முதல் தமிழகப் பயணம் இது. பிரதமரின் இந்தப் பயணத்தின்போது, நேரில் வரவேற்றது முதல் காத்திருந்து வழியனுப்பி வைத்தது வரை உடனிருந்தார் முதல்வர் விஜய்.

    English Summary

    After concluding various engagements in Chennai, Prime Minister Modi departed for Delhi on a special flight. Chief Minister Vijay waited at the airport for over an hour and a half to see him off.