சென்னை: முதல்வர் விஜய் தொடர்ந்து 2வது வாரமாக ஞாயிற்றுக்கிழமையில் பணியாற்றி இருப்பது தவெகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த வாரம் மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்காக பிரதமர் மோடி வந்த போது முதல்வர் விஜய் ஞாயிற்றுக்கிழமை பணியாற்றி இருந்தார். இந்த வாரம் கனமழை காரணமாக ரிப்பன் மாளிகையில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், நேற்றிரவு திடீரென சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னையில் கத்திவாக்கம், திருவொற்றியூர், பாரிமுனை, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மேக வெடிப்பை போல் 2 மணி நேரத்திலேயே சுமார் 20 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
இதனால் வடசென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இருப்பினும் மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் நள்ளிரவிலேயே மழைநீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் அதிகாலையிலேயே சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையில் மழைக்கால பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இதன்பின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஞாயிற்றுக்கிழமையில் முதல்வர் விஜய் பணிகளை மேற்கொண்டிருப்பது 2வது முறையாகும். வழக்கமாக முதல்வர் விஜய் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் எவ்வித பணிகளிலும் ஈடுபட மாட்டார். திங்கம் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பணிகளை மேற்கொள்வார். கடந்த 5 மாதங்களில் முதல்வர் விஜய்யின் இந்த நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. தற்போது அக்டோபர் மாதத்தில் தொடர்ச்சியாக 2 ஞாயிற்றுக்கிழமை முதல்வர் விஜய் வெளியில் வந்துள்ளார். கடந்த வாரம் பிரதமர் மோடி மெட்ரோ ரயில் திறப்புக்காக சென்னை வந்தார். அந்த விழாவில் பங்கேற்க விஜய் வந்தார். தற்போது மழைக்கால பாதுகாப்பு பணிகளை விஜய் ஆய்வு செய்துள்ளார். இது தவெகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.