தேங்காய் பர்பியா? தேசிய விருதா? ஜூரி குழுவில் கலா மாஸ்டரா? ராயன் தேர்வை விமர்சித்த பிரபலம்

  • சென்னை: "சிறந்த படம் என்கிற தகுதியை "ராயன்" படத்திற்கு எந்த அடிப்படையில் கொடுத்தீர்கள்? 2024ல் வந்த சிறந்த தமிழ் படங்களின் லிஸ்ட்டை எடுத்தால் ராயனை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? இதில் நடுவர் குழு அதாவது ஜூரியாக தமிழ் சினிமாவிலிருந்து டான்ஸ் மாஸ்டர் கலா இருந்திருக்கிறார். ஒரு டான்ஸ் மாஸ்டருக்கும், சிறந்த திரைப்படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? ஒரு முழுப் படத்தையும் மதிப்பிட இயக்குனர், கதாசிரியர் அல்லது எடிட்டர்களை நடுவராகப் போட்டிருக்கலாமே" என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

    Advertisement

    Cheyyaru Balu என்ற சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "தேங்காய் பர்பியா, தேசிய விருதா? என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்.. தேசிய விருது என்கிற பெயரில் இந்த முறை நடந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி. விருதுகளுக்கான ஒரு மதிப்பு இருக்கிறது.

    Advertisement

    தேசிய விருது தனுஷின் ராயன்

    ஆனால், இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளில் பெரும் சர்ச்சை உருவாகி இருக்கிறது. 2024-ல் தமிழ் சினிமாவில் எவ்வளவோ ஆகச்சிறந்த படைப்புகள் வந்திருந்தும், அதெல்லாம் நடுவர் குழுவின் கண்ணுக்குத் தெரியவில்லையா சாமி என்ற கேள்வி எழுகிறது.

    தனுஷின் நடிப்பு திறமையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.. அவர் நடிப்பில் ஒரு அசுரன். ஆனால், சிறந்த படம் என்கிற தகுதியை "ராயன்" படத்திற்கு எந்த அடிப்படையில் கொடுத்தீர்கள்? 2024ல் வந்த சிறந்த தமிழ் படங்களின் லிஸ்ட்டை எடுத்தால் ராயனை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?

    Advertisement

    ஜூரி குழுவில் கலா மாஸ்டர்

    இதில் நடுவர் குழு அதாவது ஜூரியாக தமிழ் சினிமாவிலிருந்து டான்ஸ் மாஸ்டர் கலா இருந்திருக்கிறார். ஒரு டான்ஸ் மாஸ்டருக்கும், சிறந்த திரைப்படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? ஒரு முழுப் படத்தையும் மதிப்பிட இயக்குனர், கதாசிரியர் அல்லது எடிட்டர்களை நடுவராகப் போட்டிருக்கலாமே.

    அதே வருடம் வெளியான வாழை, தங்கலான், அயோத்தி, வணங்கான், கொட்டுக்காளி, இத்தனை படங்கள் உள்ளதே.. தனுஷ் படத்திற்கு 3 விருதுகள் வந்ததன் பின்னணியில் அரசியல் லாபி இருக்குமோ என்ற பேச்சும் ஓடுகிறது.

    தனுஷ் கொடி - அரசியல் ஆசை

    தனுஷின் ரசிகர் மன்றக் கொடி அரசியல் கொடியாக மாறியதற்கு அவரோ, அவர் குடும்பத்தினரோ இன்னும் வாய் திறக்கவில்லை. விஜய் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்ததுமே இவர்களுக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது. பிஜேபி அரசு எதிர்கால ஆதரவிற்காக தனுஷிற்கு 3 முறை டோக்கன்களை போட்டு வைத்திருக்கிறதா என்ற சர்ச்சை எழுகிறது.

    Advertisement

    பாலுமகேந்திரா கிரேட்

    நடுவர் தேர்வு எவ்வளவு முக்கியம் என்பதற்கு 1992-ல் நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன். அப்போது நடுவராக இருந்த இயக்குனர் பாலுமகேந்திரா, தன் நெருங்கிய நண்பரான இளையராஜாவின் "தேவர் மகன்" இசையைத் தாண்டி, புதிய வரவான ஏ.ஆர். ரஹ்மானின் "ரோஜா" பட இசைக்குச் சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுத்தார். "நடுவர் சீட்டில் இருக்கும்போது நான் பாகுபாடோ, நட்போ பார்க்கக் கூடாது" என்று ஆணித்தரமாகக் கூறினார். அதுதான் நேர்மை.

    ஆனால் இந்த முறை, சீனாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டாடப்பட்ட விஜய் சேதுபதியின் "மகாராஜா" படத்திற்கு ஏன் விருது தரவில்லை? 1400களில் நடந்த கதையை, தமிழர்களின் உழைப்பைப் பேசிய "தங்கலான்" படத்திற்காகத் தன் உருவத்தையே மாற்றிய விக்ரமிற்கு சிறந்த நடிகர் விருது கொடுத்திருக்க வேண்டாமா?

    Advertisement

    ராயன் தகுதியான படமா

    ஜாதி அரசியலை கிரிக்கெட் வழியே பேசிய "லப்பர் பந்து", எளிய மக்களின் வாழ்க்கையை நுணுக்கமாகச் சொன்ன மாரி செல்வராஜின் "வாழை", மத நல்லிணக்கத்தைப் பேசிய "அயோத்தி", மாற்றுத்திறனாளியின் உளவியலைப் பேசிய "வணங்கான்" மற்றும் எதார்த்தமான "கொட்டுக்காளி" போன்ற ஆகச்சிறந்த படங்கள் நடுவர்களின் கண்ணுக்குத் தெரியாமல் போனது ஏன்?

    பிற மொழிப் படங்களில் எந்த சர்ச்சையும் இல்லை, அங்கு சரியான நடுவர்களை அனுப்பினார்கள். ஆனால் தமிழில், 400 படங்களைப் பார்த்ததால் தலைசுற்றிவிட்டது என்கிறார்கள்.

    ஒரு சினிமா பத்திரிகையாளரே வருஷத்திற்கு 200 படம்தான் பார்க்க முடியும். கடந்த காலத்தில் வட-தென் பாகுபாட்டால் சிவாஜி கணேசன், எஸ். ஜானகி போன்றோர் தேசிய விருதுகளைத் திருப்பித் தந்துள்ளனர். விருதுகள் என்பது கலைஞர்களுக்கான பூஸ்ட்... தனுஷ் சிறந்த கலைஞர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் "ராயன்" அதற்கு தகுதியான படமா என்பதுதான் மக்களின் மிகப்பெரிய கேள்விக்குறி" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Coconut Barfi or National Award? Celebrity Questions Kala Master in Raayan Award Selection