சென்னை: கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படும் 10 மாத பெண் குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையே உயிரிழப்புக்குக் காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதுதொடர்பாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணி சரண்யா தம்பதி கோவை வெள்ளலூர் பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கனிஷ்கா ஸ்ரீ என்ற 10 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்நிலையில் வெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி கனிஷ்கா ஸ்ரீ தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வீடு திரும்பியவுடன் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை புதன்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திய பிறகே குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை விவரங்களை தங்களுக்கு தரவில்லை எனக் கூறிய பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இது தொடர்பாக சுகாதாரத்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த நிலையில் குழந்தையின் மரணம் தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நலம் மற்றும் மருத்துவ துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்," தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள், உரிய தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு உட்பட்டு பெறப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. தடுப்பூசிகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சேமிப்பு முதல் குழந்தைகளுக்கு வழங்கப்படும் நிலை வரை பரிந்துரைக்கப்பட்ட குளிர்சங்கிலி (Cold Chain) முறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன. தடுப்பூசிகளைக் கையாளுதல், சேமித்தல் மற்றும் வழங்குதல் ஆகிய அனைத்துக் கட்டங்களிலும் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் சுகாதார அலகு மாவட்டத்தில், தடுப்பூசி செலுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் வலிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு குழந்தை உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அக்குழந்தைக்கு 07.10.2026 அன்று தட்டம்மை-ரூபெல்லா (MR) முதல் தவணைத் தடுப்பூசி, செயலிழக்கச் செய்யப்பட்ட போலியோ தடுப்பூசியின் மூன்றாவது தவணை (fIPV) மற்றும் நியூமோகாக்கல் தடுப்பூசியின் ஊக்கத் தவணை (PCV Booster) ஆகியவை செலுத்தப்பட்டன. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர், நடைமுறையின்படி 30 நிமிடங்கள் குழந்தை கண்காணிக்கப்பட்டு, உடல்நலத்துடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டது. அன்று மாலை குழந்தைக்கு ஏற்பட்ட லேசான காய்ச்சல், பாராசிட்டமால் மருந்து வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தணிந்தது. மறுநாளும் குழந்தை நலமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 09.10.2026 அன்று மாலை குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதிலும், குழந்தை உயிரிழந்தது. மருத்துவப் பதிவுகளில், Febrile Status Epilepticus எனப்படும் காய்ச்சலுடன் தொடர்புடைய நீடித்த வலிப்பு நிலை குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம், தடுப்பூசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்படும் பாதக நிகழ்வுகள் குறித்த கண்காணிப்பு மற்றும் விசாரணை நடைமுறையான AEFI (Adverse Event Following Immunisation) முறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் முந்தைய மருத்துவ வரலாறு, சிகிச்சைப் பதிவுகள், சம்பவம் நிகழ்ந்த சூழ்நிலைகள் மற்றும் தொடர்புடைய மருத்துவ விவரங்கள் ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்படும். மேலும், இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியவும், தடுப்பூசிக்கும் இந்நிகழ்வுக்கும் ஏதேனும் காரணத் தொடர்பு உள்ளதா என்பதை மதிப்பிடவும், உரிய நிபுணர் குழுவின் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது என்பதைக் கொண்டு மட்டுமே, அந்த நிகழ்வு தடுப்பூசியினால் ஏற்பட்டது என முடிவு செய்ய முடியாது. அனைத்து மருத்துவ மற்றும் விசாரணைத் தகவல்களும் முறையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, உரிய முடிவுகள் எடுக்கப்படும். முதற்கட்டத் தகவலின்படி, அதே தடுப்பூசிக் குப்பிகளிலிருந்து தடுப்பூசி செலுத்தப்பட்ட மற்ற இரண்டு குழந்தைகளும் நலமாக உள்ளனர். அதே வரிசை எண் கொண்ட குப்பியில் இருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட 549 குழந்தைகளூம் நலமாக உள்ளனர். இந்த விவரமும் விசாரணையின் ஒரு பகுதியாகக் கருத்தில் கொள்ளப்படும். குழந்தைகளின் நலனும் பாதுகாப்பும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ்நாட்டில் தடுப்பூசிகளின் தரம், குளிர்சங்கிலி பராமரிப்பு, தடுப்பூசி வழங்கும் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தடுப்பூசிக்குப் பிந்தைய பாதக நிகழ்வுகளைக் கண்காணித்தல் ஆகியவை தொடர்ந்து உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குரிய தவணைத் தடுப்பூசிகளைத் தவறாமல் உரிய காலத்தில் செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் குழந்தைகளுக்கு கவலைக்குரிய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என கூறப்பட்டுள்ளது.