சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் எம்.பிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க கோரிய மனு தொடர்பாக, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு கடந்த மாதம் 17 ஆம் தேதி நடைபெற்றது. மாநாட்டு மேடைக்கு திருமாவளவன் வந்தபோது, பலர் அவரை சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
கூட்டம் கட்டுக்கடங்காமல் மேடையை நோக்கி முண்டியடித்ததில், திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடையும் சூழல் உருவானது. இதையடுத்து, அவர் தனது உரையை சுருக்கமாக முடித்துக்கொண்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். அதைத்தொடர்ந்து, 'மாநாட்டு மேடையில் ஏற்பட்ட இந்த நெரிசல் இயல்பாக நடந்த சம்பவம் அல்ல, சமூக விரோதிகள் சிலரால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட சதி போல தோன்றுகிறது' என விசிக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ராஜேந்திரன் மற்றும் நெப்போலியன், உளுந்தூர்பேட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டி, திருமாவளவனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தனர். உளுந்தூர்பேட்டை மாநாட்டு மேடை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறை செயலர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.