கோவை: திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். கம்யூனிஸ்ட்களும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் தீவிர பிரச்சாரம் செய்யும் முடிவுடன் கம்யூனிஸ்ட்கள் இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எங்கள் கட்சியின் மாநில குழுவின் முடிவின்படி, விரைவில் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. வழக்கமாக சட்டமன்ற உறுப்பினர் மறைவால் மட்டுமே இடைத்தேர்தல் வரும். ஆனால் இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, பதவியை ராஜினாமா செய்து 20 நாட்களுக்குள் கட்சி மாறி தவெகவில் இணைந்தனர். தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துவிட்டது. இதனை எதிர்கொண்டாக வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள். அதிமுக பாஜக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக கூட்டணி வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். மக்கள் நலனை முன்னிறுத்தி களம் காணும் மாற்று சக்தியான கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். இந்த மூன்று அணிகளிலும் இடம்பெறாத பிற அரசியல் கட்சிகளும் கம்யூனிஸ்ட் ஆதரவளிக்க வேண்டும். இதற்காக மற்ற கட்சிகளின் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கோரவுள்ளோம். தமிழகம் இனி இடது பக்கம் என்ற முழக்கத்துடன் இடைத்தேர்தலை எதிர்கொள்வோம். களத்தில் இறங்கி வேலை பார்ப்போம். சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்வது வரவேற்கத்தக்கது. மக்கள் நலன் சார்ந்த விவாதங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. நேரத்தை வீணடிக்கும் போக்கே நிலவுகிறது. பேரவையில் உள்ள நான்கு கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் மக்கள் பிரச்சனைகளுக்காக முழுமையாக குரல் கொடுத்துள்ளனர். அவர்களுடன் மேலும் இருவர் சட்டமன்றத்துக்குள் செல்வது உழைக்கும் மக்களின் குரலை பலப்படுத்தும். தவெக தலைமையிலான கூட்டணியிலோ அல்லது அமைச்சரவையிலோ கம்யூனிஸ்ட் இடம்பெற மாட்டோம் என்பதை முன்பே தெளிவுபடுத்திவிட்டோம். அந்தந்த அரசியல் சூழலுக்கு ஏற்பவே தேர்தல் கூட்டணி அமையும். எந்த ஒரு கட்சியும் காலம் முழுவதும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க முடியாது. ஆளும் அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத போக்குகள் ஆகியவற்றை தேர்தல் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்வோம்" என்றார்.
தமிழகம் இடது பக்கம்தவெகவுக்கு சிக்கல்