டிஆர்பி தேர்வில் முறைகேடு இல்லை.. ஆனால் உண்மையில் நடந்தது என்ன.. ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்

  • சென்னை: தற்போது கூறப்படும் முரண்பாடுகள் அனைத்தும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும்போது செய்த தனிப்பட்ட தரவு பதிவு மற்றும் தட்டச்சுப் பிழைகளே தவிர, தேர்வு நடைமுறையில் எந்தவித குறைபாடோ, முறைகேடோ இல்லை. உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெற வில்லை, முடிவு குறித்து எழும் புகார்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த டிசம்பர் மாதம் தேர்வு நடத்தியது. 42,064 பேர் தேர்வு எழுதினர். கடந்த பிப்ரவரியில், ஐந்து பாடப்பிரிவுகளுக்கான முடிவுகள் வெளியாகியது. மீதமுள்ள, 56 பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியது. இந்த தேர்வில், மதிப்பெண் வழங்குவதில் குளறுபடிகள் நடந்திருப்பதாக தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி, யு.ஜி.சி., தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் சங்க மாநில தலைவர் தங்கராஜ் புகார் கூறியிருந்தார்.

    Advertisement

    இதுபற்றி அவர் கூறும் போது, உதவி பேராசிரியர் தேர்வில், முதற்கட்டமாக வெளியிடப்பட்ட முடிவின்படி, பணி நியமன ஆணை பெற்ற ஐந்து பேரில், இருவரின் பணி அனுபவ மதிப்பெண்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஒரு தேர்வரின் பணி, அனுபவ மதிப்பெண் சான்றிதழ் சரி பார்ப்புக்கு முன், 11 ஆக இருந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், 13 ஆக உயர்ந்தது. அதேபோல, மற்றொருவருக்கு, பணி அனுபவ மதிப்பெண், பூஜ்ஜியத்தில் இருந்து, 15 ஆக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    விடைகுறிப்பு

    தற்போது, வெளியிடப்பட்ட தேர்வு முடிவில், கட்டுரை வினாக்களுக்கு பதில் அளித்தவர்களுக்கு, 50க்கு பூஜ்ஜியம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. சிலருக்கு 50க்கு 49 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினாக்களுக்கு, விடைக்குறிப்பு ஏதும் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரிய செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று தங்கராஜ் புகார் கூறியிருந்தார்.

    Advertisement

    எப்படி நடந்தது

    இதேபோல் தமிழ்நாடு அரசு கலைக்கல்லுாரி, கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சிவகுமார் கூறும் போது, கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வில், தாள் 2ல், ஒரு கேள்விக்கு 10 மதிப்பெண் வீதம் 5 கேள்விகளுக்கு, 50 மதிப்பெண்கள் இடம் பெற்றன. தி.மு.க., ஆட்சியாளர்கள், பண விளையாட்டை காட்டவே, இப்படி மதிப்பெண்கள் உருவாக்கப்பட்டன. அதில், சிலருக்கு 49, சிலருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

    பூஜியம் மதிப்பெண்

    ஒரு தேர்வர், முதல் தாளில், 150க்கு 111 மதிப்பெண் பெறுகிறார். ஆனால், கட்டுரை பகுதியில், அவருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கிறது. சிலருக்கு, 49 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. பணி மூப்பில் முன்னிலையில் இருப்பவர்களுக்கு, ஒற்றை இலக்க மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளன. பணம் தந்து ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கு, மதிப்பெண் வாரி வழங்கப்பட்டுள்ளதோ என சந்தேகம் எழுந்துள்ளது" இவ்வாறு கூறியிருந்தார். இதே கருத்துககளை அரசியல் கட்சி தலைவர்களும் கூறி விமர்சித்தனர்.

    Advertisement

    முறைகேடு நடக்கவில்லை

    இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறுகையில், "தற்போது கூறப்படும் முரண்பாடுகள் அனைத்தும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும்போது செய்த தனிப்பட்ட தரவு பதிவு மற்றும் தட்டச்சுப் பிழைகளே தவிர, தேர்வு நடைமுறையில் எந்தவித குறைபாடோ, முறைகேடோ இல்லை.


    தட்டச்சுப்பிழை

    உதாரணமாக ஒரு விண்ணப்பதாரர் தனது உண்மையான பிறந்த தேதியான 27.9.1991 என்பதற்கு பதிலாக, தவறுதலாக 5.6.2006 என்று ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவிட்டுள்ளார். விண்ணப்பதாரர் தனது எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழில் உள்ள "டி.எம்.ஆர். கோடு எண். மற்றும் தேதி" என்ற பகுதிக்குக் கீழே இருந்த தேதியை, தனது உண்மையான பிறந்த தேதி என நினைத்து தவறுதலாக பதிவிட்டதே இதற்கு காரணம் ஆகும். அதேபோல் மற்றொரு விண்ணப்பதாரர் தனது பெயருக்கு பதிலாக எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் எண்ணை பதிவிட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.இந்த பிழைகள் அனைத்தும் விண்ணப்பதாரர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட தட்டச்சுப் பிழைகளே தவிர, தேர்வு முடிவு அல்லது தரவரிசையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    Advertisement


    சிறிய முரண்பாடுகள்

    இறுதி தேர்வுப் பட்டியல் ஆன்லைன் விண்ணப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுவதில்லை. தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பதாரரின் கல்விச் சான்றிதழ்கள், வயது, பிற விவரங்கள் அனைத்தும் அதிகாரிகள் முன்னிலையில் கட்டாயமாக சரிபார்க்கப்படும். அந்த கட்டத்தில் இத்தகைய சிறிய முரண்பாடுகள் சரிசெய்யப்படும்.

    வதந்திகளை நம்ப வேண்டாம்

    மேலும், எழுத்துத் தேர்வு, விடைத்தாள் மதிப்பீடு, மதிப்பெண்கள் வெளியீடு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி மிகவும் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ளப்பட்டது. தட்டச்சுப் பிழைகள் காரணமாக எந்த விண்ணப்பதாரரும் கூடுதல் பலன் பெறவில்லை.
    எனவே, சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், புகார்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும், அனைத்து ஆட்சேர்ப்பு நடைமுறைகளிலும் வெளிப்படைத்தன்மை, நியாயத்தன்மை மற்றும் நேர்மையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்" இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.

    English Summary

    The Teachers Recruitment Board has issued a comprehensive clarification stating that no irregularities took place in the examination for the post of Assistant Professor and that the complaints regarding the results are completely baseless.