சென்னை: தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன. கட்சியின் பெயரை 'தேசிய வெற்றி கழகம்' என மாற்றி, 100 மக்களவைத் தொகுதிகளைக் குறிவைத்து களம் இறங்க தவெக வியூகம் அமைத்து வருகிறது.
ஆனால், இந்த அதிரடி நகர்வு தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் மேலிடத்தை உச்சக்கட்ட அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
தேசிய அளவில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாமல், விஜய்யை தனி மாற்றுத் தலைவராகக் காட்ட தவெக முயற்சித்தால், தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசுக்கு அளித்து வரும் ஆதரவை பாதியிலேயே திரும்பப் பெற டெல்லி காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை முழுமையாகப் பெறவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அளித்த ஆதரவின் காரணமாகவே விஜய் தலைமையில் கூட்டணி அரசு பதவியேற்று செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை நடத்திக்கொண்டே, தேசிய அளவில் ராகுல் காந்தியின் இடத்திற்கு சவால் விடும் வகையில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். சமீபத்தில் வெளியான 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்ததும், வட மாநிலங்களில் அவருக்காக நடத்தப்படும் தீவிர இணையப் பிரச்சாரங்களும் காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளன. "ராகுல் காந்தியை பிரதமராக்க நாங்கள் கட்சி தொடங்கவில்லை; 1996 தேவகவுடா பாணியில் 2029-ல் விஜய்யை பிரதமராக்குவதே இலக்கு" என்று தவெக தரப்பிலிருந்து வெளியாகும் கருத்துகள் காங்கிரஸ் மேலிடத்தை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. இதுகுறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்தபோது, தேசிய அளவில் ராகுல் காந்தியின் தலைமைக்கு எதிராக விஜய் களம் காண்பதை காங்கிரஸ் ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என்று தெரிவிக்கின்றனர். தேசிய அரசியலில் முரண்பட்ட நிலைப்பாட்டை எடுக்கும் பட்சத்தில், தமிழகத்தில் தவெக அரசுக்கு வெளியில் இருந்தும் அமைச்சரவையில் இருந்தும் தரும் ஆதரவை முழுமையாக வாபஸ் பெற தலைமை தயங்காது என்ற எச்சரிக்கை சமிக்ஞைகள் விஜய் தரப்புக்கு அனுப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை காங்கிரஸ் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றால், சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்படும். எதிர்க்கட்சிகள் இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்றால், ஆட்சி கவிழும் அபாயமும் அல்லது அரசியல் குழப்பங்களும் உருவாக வாய்ப்புள்ளது. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைப்பதா அல்லது தேசிய அளவில் 'பிரதமர் வேட்பாளர்' என்ற இலக்கை நோக்கிப் பயணிப்பதா என்ற மிகக் கடுமையான அரசியல் முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு விஜய் தள்ளப்பட்டுள்ளார். காங்கிரஸின் இந்த மறைமுக எச்சரிக்கை தவெகவின் தேசிய அரசியல் வேகத்தைக் கட்டுப்படுத்துமா அல்லது விஜய் தனது 'தேசிய வெற்றி கழகம்' திட்டத்தில் பிடிவாதமாக இருப்பாரா என்பதுதான் தற்போதைய பிரதான விவாதமாக உள்ளது. டெல்லி காங்கிரஸின் இந்த அதிரடி திட்டம், தமிழகத்தில் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தி, மாநில அரசியலில் புதிய திருப்பங்களை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.தமிழகத்தில் தவெக ஆட்சியின் நிலை
டெல்லி காங்கிரஸ் தலைமையின் அதிருப்தி
ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமா?
அடுத்து என்ன நடக்கும்?