சென்னை: தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களுக்கெள்ளாம் காங்கிரஸ்காரர்கள் தான் பாடம் எடுத்துக் கொண்டுள்ளார்கள். புதிதாக வந்துள்ள அமைச்சர்களுக்கு போக போகத்தான் பக்குவம் வரும் எனவும், தமிழகத்தில் காங்கிரஸ் இல்லை என்றால் எந்தக் கட்சியும் ஆட்சியாள முடியாது. காங்கிரஸால் மட்டும் தான் அதை உருவாக்க முடியும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுரேஷ் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறுசீரமைப்பு திட்ட ஆலோசனைக் கூட்டம் மேற்கு மாவட்ட தலைவர் சாமிநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கமிட்டி மேலிட பார்வையாளர் சுரேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய அவர்,"அமைச்சர்களுக்கெள்ளாம் காங்கிரஸ்காரர்கள் தான் பாடம் எடுத்துக் கொண்டுள்ளோம். சட்டமன்றத்திற்கு புதிதாக வந்தவர்கள் அமைச்சர்களாக ஆகியுள்ளார்கள் எல்லோரும் இளம் வயதுடைய துடிப்பான இளைஞர்கள் வந்துள்ளார்கள். அவர்களுக்கு போதுமான பக்குவம் போகப் போக தான் வரும். தவெக இந்தியா கூட்டணியில் கட்டாயம் பங்குபெறும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் இடம் பெறும். நாங்கள் தவெக-ற்கு ஏன் ஆதரவு கொடுத்தோம் என்றால் அரசாங்கம் கவர்னர் ஆட்சி மூலம் தமிழகத்தை கைப்பற்றி கபலீகரமாக்க பாஜக அரசு செயல்திட்டம் தீட்டப்பட்டது. அதை முறியடிப்பதற்குதான் காங்கிரஸ் ஆதரவு அளித்தது. தமிழகத்தில் காங்கிரஸ் இல்லை என்றால் எந்தக் கட்சியும் ஆட்சியாள முடியாது. காங்கிரஸால் மட்டும் தான் அதை உருவாக்கமுடியும். காங்கிரஸ் இல்லை என்றால் திமுக 65 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட வந்திருக்க முடியாது. திமுக தனித்து நின்றால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்பது முன்னால் முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும். அதனால் தான் கூட்டணி கட்சியை கூட வைத்துக்கொண்டு முதல்வரானார்கள். ஆனால் கூட்டணி கட்சியினரை முதுகில் குத்தி விட்டார்கள். 2029 பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக்குவதற்கும், எதிர்வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கும் தற்பொழுது கட்சியில் மறு சீரமைப்பு நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.