விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி!

  • சென்னை: குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை, காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் த.வெ.க வின் தலைவர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக்கியுள்ளார்கள்.

    Advertisement

    அவர் ஒரு சிறப்பான அரசாங்கத்தை தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாம் அவருக்குத் துணை நிற்போம்.

    ஆனால் அதற்காக த.வெ.க தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது. அந்த வழிமுறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும். பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது . இம்மாதிரியான சூழலில் மாற்றுக் கருத்துகள் நமக்கு இருக்குமேயானால் அதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதுதான் தார்மீக ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் சரியானது. தோழமை சுட்டுதல் என்று தமிழ் இலக்கியம் அதை அழகாகச் சொல்கிறது.

    Advertisement

    குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை, காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில் பாஜக மக்கள் தீர்ப்பிற்கு எதிராக,குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமலும்,அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்கமுடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்படுமேயானால் அது காந்திக்கும்,நேருவுக்கும், கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். தலைவர் ராகுல்காந்தி கொள்கைக்காக சமரசமற்றுப் போராடி வருகிற சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது" எனக் கூறியுள்ளார்.

    English Summary

    Jothimani says Congress cannot justify horse-trading politics even while supporting Vijay-led TVK government in Tamil Nadu.