திருவள்ளூர்: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளின் கூட்டணி, நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படுகிறது. திமுக தயவில் தான் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்றன. அவர்கள் அடக்கி வாசிக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். இந்நிலையில் அன்புமணிக்கு காங்கிரஸ் எட்பி சசிகாந்த் செந்தில் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.
திருவள்ளூரில் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ்காரர்கள் என்றால் ஆவேசமாக பேச மாட்டார்கள் என்று அன்புமணி ராமதாஸ் நினைக்கிறார். அது நல்ல விஷயம் தான். எல்லாவற்றுக்கும் ஒரு லிமிட் இருக்கும். அந்த லிமிட்டை தாண்டி செல்லும்போது, காங்கிரஸ் கட்சியினரும் ஆவேசத்தை காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர் எங்களுக்கு பாடம் எல்லாம் எடுக்க தேவையில்லை.
பட்டினப்பாகத்தில் தலைமை செயலகம் அமைக்க வேண்டுமென பரிந்துரை தான் செய்துள்ளனர். எல்லா கோணங்களிலும் ஆய்வு செய்து, அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி தான் முடிவு செய்யப்படும். புதிய தலைமை செயலகம் நமக்கு தேவை தான். இதுகுறித்த தேவை ரொம்ப நாட்களுக்கு முன்பே எழுந்துவிட்டது. நீங்கள் உள்ளே சென்றால் தெரியும். ஒரு கூண்டுக்குள் பயணிப்பதை போல தான் தெரியும். நல்ல தலைமை செயலகம் தேவை. அது எங்கு என்பதை அரசு சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். பரந்தூரில் விமான நிலையம் கைவிட்டதற்கு காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் அடுத்த இடத்திலும் வரக்கூடாது. அது வராது என்கிறார்கள். அதனால் திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் வரப்போகிறது என்பது அரசல் புரசலாக வந்துள்ள தகவல் தான். உறுதியான தகவல் கிடைத்தால் ஆலோசிப்போம். விலைவாசி சகட்டுமேனிக்கு உயர்ந்து வருகிறது. உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டுளவுக்கு உயர்கிறது. ஒன்றிய அரசு தான் காரணம். உணவு பொருள் மீதான பணவீக்கம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மற்ற பொருட்கள் என்றால் கூட ஓரளவுக்கு சமாளித்துவிட முடியும். உணவு பொருள் அப்படியல்ல. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.தலைமை செயலகம் தேவை
விலைவாசி உயர்வு