சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் ஆகியுள்ளது. முதலமைச்சர் விஜய், அமைச்சர்களின் செயல்பாடுகளில் வரவேற்பும், சர்ச்சையும் எழுந்து வருகிறது. பல அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் ஆய்வு செய்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கனிம வளம் எடுப்பதில் கறார் காட்டி வருகிறார்கள். இதனால் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஜல்லி, எம் சாண்டூ உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு என்பது தவறான தகவல் என கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், "தற்போது சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், கனிமவளப் பொருள்களான ஜல்லி, எம் சாண்டு மற்றும் பி சாண்டு ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், கட்டுமானத் துறையினர் மற்றும் வாடிக்கையாளர்கள் யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அரசு ஜல்லி ஒரு யூனிட் ரூ.4,000/-, எம் சாண்ட் ஒரு யூனிட் ரூ. 5,000/ மற்றும் பி சாண்ட் ரூ.6,000/ கட்டணமாக நிர்ணயித்துள்ளார்கள். ஆனால் எங்களது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலைக்கும் குறைவாகவே விற்பனை செய்து வருகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, கனிமவளப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக வெளியாகும் ஆதாரமற்ற செய்திகள் மற்றும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புவதைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி" என்று கூறியுள்ளனர். கட்டுமானத்திற்கு தேவையான கனிம விலை பொருட்களின் விலை உயர்ந்ததாக தகவல் வெளியான நிலையில், இந்த தகவல் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.கட்டுமான பொருட்கள் விலை