'சின்னப் பசங்க சார்'; ஆவேசப்பட்ட சென்னை பைக் ரேஸ் வாலிபர்களின் பெற்றோர்! கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

  • சென்னை: சென்னை அண்ணாசாலையில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட 4 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 இளைஞர்களைத் திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பைக் ரேஸ் சம்பவங்களைத் தடுக்கக் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், "சிறார்களுக்கு வாகனத்தை ஓட்டக் கொடுத்த பெற்றோர் மீதே வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களைத்தான் முதலில் சிறையில் தள்ள வேண்டும்" என வலியுறுத்தி வருகின்றனர்.

    Advertisement

    சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அண்ணாசாலை, வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் திரண்ட அவர்கள், சைலன்சர்கள் மூலம் அலற வைக்கும் சத்தத்தை எழுப்பியும், 'வீலிங்' மற்றும் அபாயகரமான சாகசங்களைச் செய்தும் பொதுமக்களை அச்சுறுத்தினர். இந்தச் சம்பவத்தின் நடுவே ஒரு இளைஞர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மறுபுறம், இந்த அசுரத்தனமான ரேஸ் வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பரப்பிய சமூக ஆர்வலர்கள், சென்னை மாநகரக் காவல்துறையை நோக்கியும் கேள்விகளை எழுப்பினர்.

    Advertisement

    இதனால் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகனப் பதிவு எண்களை வைத்து ரேஸில் ஈடுபட்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கத் தொடங்கினர். ரேஸில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ததோடு, அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். வாகனம் ஓட்டி வந்த 16 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களையும், அவர்களின் பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதனிடையே, காவல் நிலையத்திற்கு வெளியே நின்றிருந்த பெற்றோர் சிலர், "எல்லாமே சின்னப் பசங்க, சிறார்கள்... சின்னப் பசங்களை எங்க சார் கூட்டிட்டுப் போறீங்க? பெரிய பெரிய கேஸையெல்லாம் விட்டுடுறீங்க, ஒண்ணுமில்லாத கேஸுக்கு நடவடிக்கை எடுக்குறீங்க... 'நம்பர் பிளேட்' சரியாகப் போட்டதுதான் நாங்கள் செய்த தப்பா?" என்று கோபத்துடன் பேசினர். மேலும், "தப்பு செய்தவர்களை விட்டுவிட்டு, தப்பு செய்யாத எங்கள் பிள்ளைகளைப் பிடித்து வந்திருக்கிறார்கள்" என்றும் ஆதங்கப்பட்டனர்.

    Advertisement

    அந்தப் பெற்றோர்களின் பார்வையில் பைக் ரேஸ் என்பது ஒரு சாதாரண வழக்காக மட்டுமே தோன்றுகிறது. ஆனால் உண்மையில், சிறார்கள் பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால், வாகனத்தின் உரிமையாளரான பெற்றோருக்கு ரூ. 25,000 அபராதமும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படச் சட்டத்தில் இடமுள்ளது.

    பைக் ரேஸ் அல்லது அதிவேகப் பயணத்தால் விபத்து ஏற்பட்டு யாராவது உயிரிழந்தால், "தெரிந்தே ஆபத்தை விளைவித்தல்" மற்றும் "கவனக்குறைவால் மரணம் விளைவித்தல்" ஆகிய பிரிவுகளின் கீழ் பெற்றோர் மீதும் குற்றவியல் வழக்குகள் பாயும். அதேபோல, சிறார்கள் ஓட்டிய பைக்கின் பதிவுச் சான்றிதழ் (RC) 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்; அந்த வாகனத்தை மீண்டும் பயன்படுத்த இயலாது. விபத்து அல்லது பைக் ரேஸில் ஈடுபடும் சிறுவனுக்கு 18 வயது முடிந்தாலும், 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் கிடைக்காது. தேவைப்பட்டால், அச்சிறுவன் மீது சிறார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு, கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்படுவான்.

    Advertisement

    சிறார்கள் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் காப்பீட்டுத் தொகையும் கிடைக்காது; நீதிமன்றம் உத்தரவிடும் பல லட்ச ரூபாய் நஷ்டஈட்டுத் தொகையைப் பெற்றோரே தங்கள் சொந்தப் பணத்திலிருந்து வழங்க வேண்டியிருக்கும்.

    மேலும், சிறார் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டால், எதிர்காலத்தில் பாஸ்போர்ட் பெறுவது, அரசு வேலைகள், வெளிநாட்டு வேலை மற்றும் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள் முற்றிலும் பாதிக்கப்படும். இவ்வளவு தீவிரமான விளைவுகள் இருக்கும் சூழலில், பெற்றோர்கள் இதனைச் சாதாரண வழக்காக நினைப்பது அதிர்ச்சியளிப்பதாக நெட்டிசன்கள் கொதிப்படைந்துள்ளனர்.

    இது குறித்து நெட்டிசன்கள் தெரிவித்த சில கருத்துகள்:

    "போலீஸ்கிட்டயே இந்த வியாக்கியானம் பேசுறாங்களே... இதுக்கு முன்னாடி இவங்களோட செல்லக் குழந்தைகள் தாறுமாறா வண்டி ஓட்டுறப்ப கம்ப்ளையிண்ட் செஞ்ச ஆளுங்ககிட்ட என்ன பேசியிருப்பாங்க? புள்ள வளர்க்குற லட்சணத்துக்காக முதல்ல இவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கணும்!" என ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    மற்றொரு நெட்டிசன், "16, 17 வயதான உடனே பைக்கை வாங்கிப் பிள்ளைகளிடம் கொடுத்துவிடுகிறார்கள். அந்தப் பையன்களை விட்டுவிட்டு, முதலில் இந்தப் பெண்கள் மீது வழக்குத் தொடர வேண்டும். இவர்கள்தான் சாலையில் வேண்டுமென்றே குழப்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.

    மூன்றாவது நெட்டிசன், "பிள்ளைகளைப் பொறுப்பாக வளர்க்காமல் பொறுக்கிகள் மாதிரி வளர்த்து ஊர் சுற்ற விடுகிறார்கள். அவர்கள் குடித்துவிட்டு நடுஇரவில் பைக் ரேஸ் போவார்களாம்... போலீஸ் பிடித்ததும் பெற்றவர்கள் வந்து போராடுவார்களாம்... இவர்களை எல்லாம் வழக்குப் போட்டு சிறையில் வையுங்கள்!" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    நான்காவது நெட்டிசன், "14 வயசு, 17 வயசுன்னு சின்னக் குழந்தைகள்னு சொல்றாங்க... லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியிருக்காங்க, பெற்றோரும் எடுத்துக் கொடுத்திருக்காங்க. இப்போது போலீஸைக் கேள்வி கேட்கிற மாதிரி, அன்னைக்கே அவங்க குழந்தைகளைக் கூப்பிட்டு, '14/17 வயசுல உனக்கு எதுக்கு வண்டி? ஓட்டக் கூடாது'னு கண்டிச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    English Summary

    Controversial remarks by the parents of youths involved in bike racing in Chennai: "Catch them and put them in jail, sir."