சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லையா? பதிவாளர் அறிக்கையால் சர்ச்சை

  • சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லையா என சர்ச்சை எழுந்துள்ளது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடப்படும் என உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    Advertisement

    நமது நாட்டின் சுதந்திர தினம் நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. அனைத்து அரசு அலுவலங்கள், நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்களிலும் சுதந்திர தின விழா கொண்டாடுவதையொட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    Advertisement

    இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாக தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இசைக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், மாநிலப் பாடலான 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடுவது குறித்து எந்தக் குறிப்பும் அதில் இடம்பெறாதது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்;

    தேசியப் பாடல் 'வந்தே மாதரம்' உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையும் 'ஹர் கர் திரங்கா' பிரசாரத்தையும் முன்னிட்டு, சென்னை முதன்மை அமர்வு, மதுரை கிளை, கோவையில் அமைந்துள்ள மாநில நீதித்துறை அகாடமி மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் வந்தே மாதரம் பாடப்படும் என்றும், அதன்பின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    எனினும், தமிழ்நாட்டின் அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் நடைமுறை உள்ள சூழலில், உயர் நீதிமன்றத்தின் இந்தச் சுற்றறிக்கையில் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது பற்றி எந்தவித தகவலும் வெளியிடப்படாதது விவாதத்தையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

    அண்மைக்காலமாகவே தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த பிறகு, அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் வரிசை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

    தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற நிகழ்வின்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக 'வந்தே மாதரம்' பாடல் முதலிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாக பாடப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    அதனைத் தொடர்ந்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் 'வந்தே மாதரம்' பாடல் முதலிலும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான கல்வி நிறுவனத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் அணமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    A controversy has arisen regarding the absence of the 'Tamil Thai Vazhthu' during the Independence Day celebrations at the Madras High Court. A circular issued by the High Court Registrar states that 'Vande Mataram' will be sung at the beginning of the event, but it contains no mention of the 'Tamil Thai Vazhthu' being performed.