குன்னூர் கோவிலில் ரூ.15 கோடி மதிப்பிலான மல்டிலெவல் பார்க்கிங் திட்டம் ரத்து.. அறநிலையத்துறை அதிரடி

  • சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூர் கோவிலில் 15 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குன்னூர், உதகையை சுற்றியுள்ள 500 கோவில்களில் கழிவறை வசதிகளே இல்லாமல் உள்ளது. இப்படிப்பட்ட கோயில்களில் கழிவறை கட்டுவதை விட கார் பார்க்கிங் கட்டுவதற்கு என்ன தேவை இருக்கிறது என நேற்று அமைச்சர் ரமேஷ் பேசியிருந்த நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.

    Advertisement

    அமைச்சர் ரமேஷ் பேச்சு

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், அறநிலையத்துறையை பொறுத்தவரைக்கும் கோவில்களின் வருமானம், கோவில்களுக்கான, கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்காக செலவிடப்படும் என்பது தான். நீலகிரி குன்னூர் விநாயகர் கோவிலில் 15 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு கடந்த ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த கோவில்களில் அடிப்படையான கழிவறை வசதிகள் கூட இல்லை. இதே போன்று குன்னூர், உதகையை சுற்றியுள்ள 500 கோவில்களில் கழிவறை வசதிகளே இல்லாமல் உள்ளது. இப்படிப்பட்ட கோயில்களில் கழிவறை கட்டுவதை விட கார் பார்க்கிங் கட்டுவதற்கு என்ன தேவை இருக்கிறது. இது கமர்சியல் திட்டங்கள் இல்லையா..

    Advertisement

    மாற்று திட்டத்தை உருவாக்குவோம்

    எனவே கோவில் நிதியில் இப்படி கமர்சியல் திட்டங்களை செய்வதை தான் நாம் ரத்து செய்துள்ளோம். கோவில் நிதியை பயன்படுத்தி மாற்று திட்டத்தை உருவாக்குவோம் என்றும் நாங்கள் அதில் கூறியிருந்தோம். எந்த இடத்திலும் மக்கள் பயன்படக் கூடிய கல்வி நிறுவனமோ, மருத்துவமனைகளோ செய்து தரமாட்டோம் என சொல்லவில்லை என பதில் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில், குன்னூர் விநாயகர் கோவிலில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக முந்தைய ஆட்சியின் போது பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    ஆணை ரத்து செய்யப்படுகிறது

    கடந்த ஆட்சிக் காலத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது, குன்னூர் விநாயகர் கோவிலில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நிதியிலிருந்து 10.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

    போதிய அடிப்படை வசதிகள் இல்லாத, மிகக் குறைந்த வருவாயைக் கொண்ட குன்னூர் விநாயகர் கோவிலுக்கு, மருதமலை கோவிலின் உபரி நிதியிலிருந்து வட்டியுடன் கூடிய கடனைப் பெற்று இந்த அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை அமைக்க எடுக்கப்பட்ட முடிவு தற்போது மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் இதுவரை தொடங்கப்படாத நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டும், பக்தர்களின் முன்னுரிமைத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், இதற்கான கட்டுமானப் பணிகளுக்கான ஆணை ரத்து செய்யப்படுகிறது.. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Coonoor Vinayagar Templ: The Tamil Nadu government has revoked an earlier order to construct a ₹15-crore multi-level parking facility at the Coonoor Vinayagar Temple, stating that temple funds should be prioritised for essential facilities and devotees' welfare.