சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டும், அந்தக் கடனுக்காக வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகள் இன்னும் திரும்பக் கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அடுத்த பருவ காலம் இன்னும் 15 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், மீண்டும் பயிர்க்கடன் பெற வேண்டிய விவசாயிகள் தங்களது நகைகள் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
கடந்த 2025-26-ம் ஆண்டு புரட்டாசி ராபி பருவத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள், பயறு வகைகள், பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பணப்பயிர்கள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர்.
ஆனால் பயிர்களில் கதிர்கள் மணிப்பிடிக்கும் தருவாயில் போதிய மழை பெய்யவில்லை. நிலங்களிலும் போதிய ஈரப்பதம் இல்லாததால் எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்கவில்லை. இதனால் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியானது. ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றிருந்தால் அந்தக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.953 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்றும், ஒட்டுமொத்தமாக ரூ.6,720 கோடி மதிப்பில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு நேற்று புதிய அரசாணையையும் வெளியிட்டது. ரூ.953.06 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.75,001 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்ற 2.38 லட்சம் விவசாயிகளுக்கு ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட ரூ.35,000-க்கு மேலாக மீதமுள்ள ரூ.40,000 தள்ளுபடி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடியில் கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்தும் நடைமுறை சிக்கல் தொடர்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வங்கிகளில் பயிர் அடங்கல் ஆவணங்களையும், நகைகளையும் அடமானமாக வைத்து பலரும் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும், அவர்களுக்கு கடனில்லா சான்று வழங்கப்படவில்லை. அதேபோல், அடமானம் வைக்கப்பட்ட நகைகளும் திரும்ப வழங்கப்படவில்லை. இதற்கிடையே பயிர் காப்பீட்டு இழப்பீடும் பல விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்றவாறு இழப்பீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டை விட சராசரி விளைச்சல் கூடுதலாக கிடைத்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டதால், இழப்பீடு வழங்க முடியாது என பயிர்க்காப்பீட்டு நிறுவனம் தெரிவித்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். நகைகளை திருப்பி வழங்குவது குறித்து கூட்டுறவு சங்க செயலாளர்களிடம் கேட்டால், அரசிடமிருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை என தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அடுத்த பருவம் இன்னும் 15 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், மீண்டும் பயிர்க்கடன் பெற நகைகளை அடமானம் வைக்க வேண்டிய சூழல் உள்ளது. அதனால் பயிர்க்கடன் தள்ளுபடியில் பயனடைந்த விவசாயிகளின் பட்டியலை வங்கி விளம்பர பலகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும், அடமான நகைகளை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடனில்லா சான்றிதழ்களை வழங்கி, அடுத்த பருவத்திற்கான பயிர்க்கடன் பெறுவதில் எந்தத் தடையும் இல்லாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்..!!கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி
தங்க நகைக்கடன் அடமானம்
தூத்துக்குடி விவசாயிகள்