திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் மூழ்கிய வாய் பேச முடியாத முதியவரை மீட்ட கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மரைன் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முன்னதாக கடலில் மூழ்கி சுய நினைவை இழந்த முதியவர், கண் விழித்த போது காவலர்கள் விசாரித்தபோது, அவர் ஒரு வெள்ளைத்தாளில், "எனக்கு வாய் பேச முடியாது; காது கேட்காது. எனது பெயர் நாகரத்தினம், ஊர் கோவை" என எழுதி காண்பித்துள்ளார். அப்போது தான் அவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்தது.
தமிழ்நாட்டின் புகழ் பெற்ற முருகன் கோவில்களில் முக்கியமானது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு நாள்தோறும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதனால் எப்போதுமே இங்கு கூட்டம் அலை மோதும். திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு தான் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த சூழலில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் காலை 8 மணி அளவில், திருக்கோயில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மரைன் காவலர் தங்கம் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பக்தர்கள் நீராடும் பகுதியில் ஒருவர் கடலில் மூழ்கிய நிலையில், அவரது கால் மட்டும் வெளியே தெரிந்தது. இதைப் பார்த்த திருக்கோயில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் சிவராஜா, ராமர், செந்தில், முருகன், மகாராஜா மற்றும் மாரிமுத்து ஆகியோர் உடனடியாகக் கடலுக்குள் இறங்கி, அந்த முதியவரை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். கடலில் மூழ்கியிருந்த அந்த முதியவர் அதிகளவில் கடல் நீரைக் குடித்து, சுயநினைவின்றி வாய் மற்றும் மூக்கு வழியாக நுரையுடன் கூடிய நீரை வெளியேற்றினார். உடனடியாகப் பாதிக்கப்பட்ட முதியவருக்குத் திருக்கோயில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் முதலுதவி செய்து, அவரது வயிற்றில் இருந்த கடல் நீரை வெளியேற்றினர். பின்பு, உடனடியாகத் திருக்கோயில் ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோயில் முதலுதவி மையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உதவி செய்தனர். அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அந்த முதியவர் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காகப் பாதிக்கப்பட்ட முதியவரைத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில், அவர் கண் விழித்தார். கண் விழித்த முதியவரிடம் விசாரித்தபோது, அவர் ஒரு வெள்ளைத்தாளில், "எனக்கு வாய் பேச முடியாது; காது கேட்காது. எனது பெயர் நாகரத்தினம், ஊர் கோவை" என எழுதி காண்பித்துள்ளார். மிகச் சரியான நேரத்தில் கடலில் மூழ்கியிருந்த மாற்றுத்திறனாளி முதியவரைக் காப்பாற்றிய கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மரைன் காவலர்களை பக்தர்களும் அதிகாரிகளும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.