முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதித்த பிடிவாரண்ட் ரத்து.. நேரில் ஆஜராகி கோரியதால் நீதிபதி உத்தரவு!

  • சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பொன்முடி நேரில் ஆஜரானதை அடுத்து பிடிவாரண்ட்டை ரத்து செய்துள்ளது நீதிமன்றம்.

    Advertisement

    சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, பொன்முடி அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

    Advertisement

    வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை, சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்து கடந்த ஜூலை 2 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

    Advertisement

    இந்நிலையில், பொன்முடி மீதான வழக்கு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர பாண்டியன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி ஆஜராகவில்லை. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பொன்முடியை செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்தும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததைக் கண்டித்து பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    Advertisement

    இந்நிலையில், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரபாண்டியன் முன் பொன்முடி இன்று நேரில் ஆஜராகி, தனக்கு எதிரான பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பொன்முடிக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்டை திரும்பப் பெற்று, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

    English Summary

    The arrest warrant issued against former DMK Minister Ponmudi in a case regarding controversial remarks has been withdrawn. The court cancelled the warrant after Ponmudi appeared in person.