இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன?

  • சென்னை: கடந்த காலங்களில் பல இஸ்லாமிய மன்னர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் பசு வதையை ஒழித்திருந்தனர் என்று குறிப்பிட்ட நீதிபதி சுவாமிநாதன், பக்ரீத் பண்டிகை நாளில் அனைத்து முஸ்லிம்களும் பசுக்களைப் பலியிடுவதில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளதை மேற்கோள் காட்டினார். தமிழ்நாட்டில் பசு வதைக்கு உடனடித் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    இந்திய மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் கே. சூர்யா பிரசாந்த் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், தமிழக அரசின் 1976-ஆம் ஆண்டு அரசாணைக்கு முழு சட்ட அங்கீகாரம் அளித்தார். இதன்மூலம், தமிழ்நாட்டில் பசு வதை முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகை அன்று (மே 28, 2026) உட்பட எந்த நாளிலும் தமிழ்நாட்டில் எங்கும் பசுக்களோ கன்றுகளோ வெட்டப்படக் கூடாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் (DGP) உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Advertisement

    மேலும், இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் கண்டிப்புடன் அமல்படுத்த கீழ்நிலை அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர்.

    நீதிமன்றம் அளித்துள்ள இணக்க அறிக்கையை (Compliance Report) வரும் மே 29-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 2023-ஐ மேற்கோள் காட்டிய நீதிபதிகள், அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்கள் தவிர வேறு எந்த இடத்திலும் ஆடு, செம்மறியாடு உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனுமதிக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தினர்.

    தீர்ப்பில் நீதிபதி சுவாமிநாதன் சொன்னது என்ன?

    தீர்ப்பில் நீதிபதி சுவாமிநாதன் முக்கியமாகச் சுட்டிக்காட்டியது, வரலாற்று தகவல்களை. இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் பலர், தங்களது ஆட்சியில் பசு வதையைத் தடை செய்திருந்ததை அவர் சான்றுகளுடன் விளக்கினார். பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மதித்து, இந்திய மண்ணின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தனர் என அவர் குறிப்பிட்டார். கடந்த கால இஸ்லாமிய மன்னர் ஆட்சிகளில், பக்ரீத் பண்டிகை நாளில் அனைத்து முஸ்லிம்களும் பசுக்களைப் பலியிடுவதில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளதை மேற்கோள் காட்டினார்.

    Advertisement

    மேலும், பக்ரீத் பண்டிகையின்போது நடைபெறும் குர்பானி குறித்தும் நீதிபதி தெளிவான விளக்கம் அளித்தார். உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய அவர், "பக்ரீத் திருநாளின் நோக்கம் தியாக உணர்வை வளர்ப்பதே. ஒரு குறிப்பிட்ட விலங்கை மட்டுமே பலியிட வேண்டும் என்பது அல்ல" என்றார். இஸ்லாமிய மார்க்கத்தில் பசுவைப் பலியிடுவது 'கட்டாயமான செயல்' (obligatory overt act) அல்ல என்பதைத் திட்டவட்டமாகப் பதிவு செய்தார்.

    இஸ்லாமிய மத நெறிமுறைகளை மதிக்கும் வகையில், பசு வதைத் தடை எந்த மத சுதந்திரத்துக்கும் எதிரானது அல்ல என்பதை நீதிபதி வலியுறுத்தினார். மாறாக, அது அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு உட்பட்டது என்பதை அழுத்தமாகக் கூறினார். இந்திய அரசியலமைப்பின் 48-ஆவது பிரிவின்படி, பசுக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசின் கடமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    Advertisement

    இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பசு பாதுகாப்பு சட்டங்களுக்கு புதிய வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் ஆனது.

    English Summary

    Cow Slaughter Ban in Tamil Nadu: Justice GR Swaminathan's Historic Verdict on Religious Harmony