“மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்” - தவெகவில் சேர்ந்த சி.மகேந்திரன் மீது CPI கடும் விமர்சனம்

  • சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் நேற்று தவெகவில் இணைந்த நிலையில், அவரைப் பற்றி சிபிஐ கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. "மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் செயல்பட்டதால் அவர் மீது கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது" என சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சிபிஐ கட்சியில் மூத்த நிர்வாகியாக இருந்து வந்த சி. மகேந்திரன், நேற்று அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளராக நீண்டகாலம் பதவி வகித்தவர் மகேந்திரன். 1971ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு முழுநேர ஊழியராக பணியாற்றி வந்தவர்.

    Advertisement

    2015ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி மகேந்திரன், சென்னை பனையூரில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய சி. மகேந்திரன், "ஊழலை ஒழிக்க முடியும் எனும் பெரும் நம்பிக்கையை நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தந்துள்ளார். அதன் காரணமாக நான் தவெகவில் இணைந்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில், "மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர் சி. மகேந்திரன்" என்றும், அவர் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிகச் சரியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்.

    Advertisement

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப் பட்டவர் சி.மகேந்திரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்து வந்த சி.மகேந்திரன் கட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்தவர். சமீபகாலமாக கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கட்சியின் கோட்பாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.

    குறிப்பாக, கட்சியின் ஆரம்பகால தலைவர்களால் உருவாக்கப்பட்ட, இன்று தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மதிப்புமிக்க பதிப்பகமாக வளர்ந்துள்ள நிறுவனத்தை குறுக்கு வழியில் சிலர் கையகப்படுத்துவதற்கு மோசடியான ஆவணங்களை தயார் செய்திருந்தனர். அத்தகைய மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் செயல்பட்டார். எனவே, சி.மகேந்திரன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவரும் கட்சியுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார்.

    Advertisement

    சி.மகேந்திரன் தனது தவறுகளை கலைந்து கொண்டு கட்சியுடன் தன்னை பொருத்திக் கொள்ள கட்சி கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தற்போது அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துவிட்டார். சி.மகேந்திரனின் இந்த நடவடிக்கையின் மூலம் அவர் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிகச் சரியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரியப்படுத்திக் கொள்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Following the joining of senior Communist Party (CPI) leader C Mahendran with TVK yesterday, the CPI has leveled harsh criticism against him. CPI State Secretary M. Veerapandian stated that disciplinary action had been taken against Mahendran because he acted in support of fraudsters.