பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட்

  • சென்னை: தமிழக அரசியல் களத்தில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), தேர்தல் வியூகங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டின் இருபெரும் திராவிடக் கட்சிகளுடனும் பல்வேறு காலகட்டங்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுள்ளது. அரசியல் கொள்கைகள், சமகால சூழல்களுக்கு ஏற்ப அந்தக் கட்சி கடந்த காலங்களில் பங்கேற்ற கூட்டணிகள் மற்றும் தேர்தல் முடிவுகள் பற்றிப் பார்க்கலாம்.

    Advertisement

    இந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதல் பொதுத்தேர்தல் (1952) நடந்தபோது, ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் மிக வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

    Advertisement

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

    1952 ஒருங்கிணைந்த மதராஸ் மாகாண சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பிரகாசமாகச் செயல்பட்டது. 62 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது திமுக தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றாலும், கம்யூனிஸ்ட் மற்றும் சில சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்தது.

    1957 & 1962 தேர்தல்கள்: கம்யூனிஸ்ட் கட்சி தனித்தும், சில உள்ளூர் உடன்பாடுகளுடனும் தேர்தலைச் சந்தித்தது. 1957ல் 4 இடங்களில் வெற்றி பெற்றது. 1962 இல் பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்தபோது, கம்யூனிஸ்ட்கள் தனித்துப் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றனர்.

    Advertisement

    திமுக-வுடன் முதல் கூட்டணி (1967 - 1971)

    1964 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு (CPI மற்றும் CPI(M)), தமிழ்நாட்டு அரசியலில் கூட்டணிக் கணக்குகள் மாறத் தொடங்கின.

    1967 - வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி: பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த பிரம்மாண்ட 'ஐக்கிய முன்னணி' கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அங்கமாக இருந்தது. இக்கூட்டணி காங்கிரஸைத் தோற்கடித்து முதன்முறையாக திமுக ஆட்சிக்கட்டிலில் அமரக் காரணமாக அமைந்தது. அப்போது சிபிஐ 2 இடங்களில் வென்றது.

    1971 தேர்தல்: மு. கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணியில் சிபிஐ தொடர்ந்து நீடித்தது. இத்தேர்தலில் திமுக - சிபிஐ கூட்டணியில் சிபிஐ 10 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றியைப் பெற்றது.

    Advertisement

    எமர்ஜென்சி காலகட்டத்திற்குப் பிறகு, தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் சிபிஐ தனது பாதையை மாற்றியது.

    அதிமுக உடன் கூட்டணி

    1977 & 1980, 1984 தேர்தல்கள்: எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்தது. எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கும் இடதுசாரிகளின் உழைப்பாளர் அமைப்புகளும் இணைந்து அதிமுக ஆட்சியைத் தக்கவைக்க உதவின.

    1977ல் 5 இடங்களிலும் 1980 சட்டசபை தேர்தலில் 10 இடங்களிலும், 1984 தேர்தலில் 2 இடங்களிலும் சிபிஐ கட்சி வெற்றி பெற்றது.

    1989 தேர்தல்: எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், சிபிஐ மீண்டும் திமுக-ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அமைத்த 'தேசிய முன்னணி' கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்றது சிபிஐ.

    Advertisement

    மாறி மாறி திமுக - அதிமுக

    90-களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக இருமுனைப் போட்டி தீவிரமடைந்தபோது, சிபிஐ தொகுதிப் பங்கீடு மற்றும் கொள்கை உடன்பாடுகளின் அடிப்படையில் கூட்டணிகளைத் தேர்வு செய்தது.

    1991: திமுக - இடதுசாரி கூட்டணி

    ராஜீவ் காந்தி மறைவின் அலை காரணமாக இக்கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. 1 இடத்தில் மட்டுமே சிபிஐ வென்றது.

    1996: திமுக - தமாகா - இடதுசாரி கூட்டணி

    அதிமுகவுக்கு எதிரான பலத்த அலையில் இக்கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்திய கம்யூனிஸ் கட்சி 8 இடங்களில் வென்றது.

    Advertisement

    2001: அதிமுக கூட்டணி

    ஜெயலலிதா தலைமையிலான இக்கூட்டணியில் சிபிஐ இணைந்து போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது.

    2006: திமுக கூட்டணி (ஜனநாயக முற்போக்கு கூட்டணி)
    மீண்டும் திமுக கூட்டணிக்குத் திரும்பி, மைனாரிட்டி திமுக அரசு அமைய ஆதரவு அளித்தது. 6 இடங்களில் சிபிஐ வெற்றி பெற்றிருந்தது.

    ஸ்ட்ரைக் ரேட்

    2011: அதிமுக கூட்டணி

    2ஜி ஊழல் உள்ளிட்ட புகார்களால் திமுகவுக்கு எதிராக மாறி, ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் பெரிய வெற்றியைப் பெற்றது. சிபிஐ கட்சி 10 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

    மக்கள் நலக் கூட்டணி எனும் 3-வது அணி (2016)

    2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு வலுவான 3-வது அணியை உருவாக்க இடதுசாரிகள் முயன்றனர். சிபிஐ, சிபிஎம், வைகோவின் மதிமுக, மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து இக்கூட்டணியை உருவாக்கின. பின்னர் விஜயகாந்தின் தேமுதிக-வும் இதில் இணைந்தது.

    இருப்பினும், இந்த மாற்று அரசியல் முயற்சி தேர்தல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; இந்தக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. சிபிஐ 25 இடங்களில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது.

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (2019 - 2026)

    2016 தோல்விக்குப் பிறகு, மத்தியில் உள்ள பாஜக அரசை வீழ்த்தவும், மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்கவும் மீண்டும் திமுக-வுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கரம் கோர்த்தன.

    2019 & 2024 மக்களவைத் தேர்தல்கள்: திமுக தலைமையிலான கூட்டணியில் சிபிஐ தலா 2 எம்பி இடங்களைப் பெற்று, நூறு சதவீத வெற்றியடைந்தது.

    2021 சட்டமன்றத் தேர்தல்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிபிஐ 6 இடங்களில் போட்டியிட்டு 2 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது.

    2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்த திமுக கூட்டணியில் சிபிஐ 5 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக அரசு ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூடும். அதில் எந்த ஜனநாயக அணியுடன் சேர வேண்டும் என்பது அப்போதைய சூழல் பொறுத்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Communist Party of India (CPI), which has maintained a significant presence in the Tamil Nadu political landscape for decades, has contested elections in alliance with the state's two major Dravidian parties at various times, depending on electoral strategies. Let us examine the alliances CPI has participated in and the election results.