சென்னை: அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் இடம்பெறும் சூழல் உருவாகி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் ஓசூர் மண்ணில் இருந்து கூட அமைச்சர் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் பேசினார். தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏவாக ராமச்சந்திரன் உள்ள நிலையில் வீரபாண்டியன் இவ்வாறு பேசியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஓசூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தமிழக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் சேருமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வீரபாண்டியன் கூறியதாவது:-
"அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெறும் சூழல் வரும். அந்த சூழல் வரும் போது இந்த மண்ணிலே(ஓசூர்) இருந்து கூட தோழர்கள் அமைச்சர்களாக வருவார்கள். அந்த காலம் நெருங்குகிறது. உங்கள் எதிர்பார்ப்புக்கு வாழ்த்துகள்" என்றார். தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தற்போது வெளியில் இருந்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு அளித்து வருகின்றன. தவெகவை ஆதரித்த பிற கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும், விசிக, ஐயூஎம்.எல் கட்சிக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் விஜய் ஒதுக்கியுள்ளார். தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் போதே கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வெளியில் இருந்தேதான் ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக உறுதியாக கூறிவிட்டன. வெளியில் இருந்து ஆதரவு அறிவித்து வரும் நிலையில் இடைத்தேர்தலில் தவெக உடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்பது பற்றி பிறகு முடிவு எடுப்போம் என்று கூறி வருகின்றன. இந்நிலையில், இன்றைய செய்தியாளர் சந்திப்பில், கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் இடம் பெறும் சூழல் உருவாகும் என்று வீரபாண்டியன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. மேலும் கூறிய அவர், ”உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து தேர்தல் வரும்போது முடிவு செய்வோம். இடதுசாரி ஒருங்கிணைப்பு குழு உருவாக்கி இருக்கிறோம். தேவையேற்படும் போது ஒருங்கிணைந்து முடிவு செய்வோம். உள்ளாட்சியோ, சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ அப்போது சூழலுக்கு ஏற்றவாறு நாங்கள் முடிவு செய்வோம். தனித்து நிற்க கூடிய சூழல் உருவானால், தனித்தே கூட கம்யூனிஸ்ட்களால் நிற்க முடியும். எங்களுக்கு வாக்களிக்க கூடிய மக்களும் இருக்கிறார்கள். அத்தகைய சூழல் ஏற்பட்டால் தனித்தே போட்டியிடுவோம்” என்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தளி தொகுதியில் ராமச்சந்திரனும் , திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்தும் வெற்றி பெற்றுள்ளனர்.காலம் நெருங்குகிறது
தனித்து கூட போட்டியிடுவோம்