முதலமைச்சர் விஜய்க்கு தெரியாமல் எப்படி உத்தரவு வந்தது? சிபிஎம் கேள்வி! கண்டன தீர்மானம் நிறைவேற்றம்!

  • சென்னை: இடதுசாரி மாணவர்களின் போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பது குறித்து சர்ச்சைக்குரிய அறிவிப்பை உயர் கல்வித்துறை விடுத்திருந்தது. இந்த அறிவிப்பு முதலமைச்சர் விஜய்க்கு தெரியாமல் எப்படி வந்திருக்கும்? என கண்டனம் தெரிவித்து.. இனி இதுபோன்று நடக்காமல் இருப்பதை விஜய் உறுதி செய்ய வேண்டும் என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானத்தை நிறைவேற்றிருக்கிறது.

    Advertisement

    தீர்மானத்தில், "உலகில் பல நாடுகளில் மிக முக்கிய நகரத்தின் மைய பகுதியில், பொதுமக்கள், அரசியல் இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களின் கோரிக்கையை முன் வைத்து போராட்டங்களை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

    Advertisement

    தமிழக அரசின் நடவடிக்கை

    ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற ஜனநாயக உரிமைகள், கோரிக்கைகளை முன் வைத்து நடத்தும் போராட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்த போராட்டங்களை காவல்துறை மிக கடுமையாக ஒடுக்கும் செயலை அரங்கேற்றுவது, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை மறுக்கும் செயலாகும். அரசின் இத்தகைய ஒடுக்குமுறையை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    விளக்கம் வேண்டும்

    மேற்படி அடக்குமுறையின் உச்சமாக, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, தனது அதிகார எல்லை மற்றும் வரம்புகளை மீறி, சட்டத்திற்கு விரோதமாக, தாலுகாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குறித்த விவரத்தை சேகரிக்க சொல்லி, 18.08.2026 அன்று, ந.க.எண். (2017/2026/அ1) உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவின் நகலை, வட்டாட்சியர் அய்யாசாமி, மாவட்ட ஆட்சியர், பழனி கோட்டாட்சியர், தலைமையிடத்து துணை ஆட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார். மாவட்ட ஆட்சியர், பழனி கோட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மேற்படி சட்ட விரோத உத்தரவின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    Advertisement

    கருப்பு ஆடுகள்

    மேற்படி உத்தரவை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட சிபிஐ(எம்) சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மேற்படி வட்டாட்சியர் பயிற்சி முடிந்துவிட்டது என மாவட்ட ஆட்சியர் 18.08.2026 பிற்பகலில், தனியரை மாவட்ட பயிற்சியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக உத்தரவு வெளியிட்டு உள்ளார். மேற்படி வட்டாட்சியர் செயல் கண்டிக்கத்தக்கது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஒன்று என ஜனநாயக குரல்கள் அதிகரித்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை, ஜனநாயக படுகொலைக்கு உடந்தையாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும் மாநில வருவாய் துறைக்குள் இருக்கும் ஜனநாயக விரோத கருப்பு ஆடுகளின் செயலாக தெரிகிறது.

    Advertisement

    அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்

    மாநில முதல்வரின் கவனத்திற்கு மேற்படி பிரச்சனை எடுத்து செல்லப்பட்ட பின்னரும், மாநிலம் முழுவதும் ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இது குறித்து விவாதித்து வரும் நிலையிலும், மாவட்ட ஆட்சியர் பயிற்சியில் இருந்து விடுவித்ததாக அறிக்கை வெளியிட்டிருப்பது, மாநில ஆட்சியாளர், வருவாய் துறை அதிகாரிகளுக்கு அளிக்கும் வழிகாட்டுதல் மீது சந்தேகம் வலுவாக ஏற்படுகிறது. ஆட்சியரின் செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்த சட்டவிரோத மற்றும் அத்துமீறலுக்கு வருவாய் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டுமெனவும், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    Advertisement

    தீர்மானம் 2

    கல்லூரி கல்வி ஆணையர் 17.08.2026 தேதியிட்டு, அரசு கடித ந.க எண்.1075/அ1/2026-1, 14.08.2026 என்பதை பார்வை என குறிப்பிட்டு, ஒரு உத்தரவை அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பி உள்ளார்.

    இந்த உத்தரவு, பார்வையில் குறிப்பிட்ட அரசு கடிதத்தில், இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களில், மாணவ-மாணவியர் மற்றும் இளைஞர்கள் பங்கெடுப்பதை, தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே, துறை இடைத் தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை எடுத்த விவரங்களை தெரிவிக்குமாறு கல்லூரி கல்வி ஆணையர் கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    ஒடுக்கும் நோக்கம்

    14.08.2026 தேதியிட்ட அரசின் சிறப்பு செயலாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பிய கடிதம், மேற்படி உத்தரவை கல்லூரி கல்வி ஆணையருக்கு வழங்கியுள்ளது. ஜூலை மாத சட்ட ஒழுங்கு குறித்த பரிசீலனையின்போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் எம்.சாய்குமார் ஐ.ஏ.எஸ் வலியுறுத்தியதாக உள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி கல்வி ஆணையரகம் இவை குறித்து என்ன நடவடிக்கை எடுத்தது என்ற அரசின் சிறப்பு செயலாளருடைய கேள்வி மிகத் தீவிர தன்மையுடன் ஜனநாயக இயக்கங்களை ஒடுக்கும் நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது.

    வன்மையாக கண்டிக்கிறது

    தலைமைச் செயலாளரும் கலந்து கொண்ட கூட்டத்தில் போராடும் உரிமை மறுக்கப்படுவது, கல்வி நிலையங்களுக்குள் காவல்துறை அத்துமீறி செல்வதை அனுமதிக்கும் வழிகாட்டுதல் வழங்கியிருப்பது மிகக் கொடிய அடக்குமுறையை கட்டவிழ்க்கும் நோக்கம் கொண்டதாகும்; அனைத்தும் திட்டமிட்டு நடந்த செயலாகும். எனவே, தலைமைச் செயலாளர் உள்ளிட்டு அதிகாரிகள் பங்கெடுத்து நடந்த பரிசீலனைக் கூட்டத்தின் இந்த முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    இடதுசாரி கட்சியினரையும், இதர ஜனநாயக நடவடிக்கைகளையும் குறிவைத்து ஒடுக்க வேண்டும் என்ற நோக்கம் ஏன் உருவானது? தலைமைச் செயலாளர் எப்படி அமைச்சரவைக்கு அல்லது முதலமைச்சருக்கு தெரியாமல், இதுபோன்ற மிகப்பெரிய முடிவுகளை எடுத்திருப்பார் ? போன்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுவது இயற்கையானதாகும்.

    முதல்வருக்கு தெரியாமலா இருக்கும்?

    19.08.2026 அன்று மீண்டும் கல்லூரி கல்வி ஆணையர் ஒரு கடிதம் மூலம் மேற்படி உத்தரவை விலக்கி கொள்வதாக கூறியுள்ளார். ஆனாலும், மேற்படி உத்தரவுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய வழிகாட்டுதலை வழங்கிய தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டுமெனவும், எதிர்வரும் காலத்தில் இது போன்ற ஜனநாயக பறிப்பு சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை தமிழக முதலமைச்சர் உறுதி செய்திட வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    CPI(M) Condemns: The Higher Education Department had issued a controversial notification regarding the participation of school and college students in protests organized by leftist student groups. Expressing condemnation and questioning how such a notification could have been issued without Chief Minister Vijay's knowledge, the Communist Party of India (Marxist) has passed a resolution insisting that Vijay must ensure such incidents do not recur.