சென்னை: இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) படுதோல்வியடைந்தது. இந்நிலையில், சட்டமன்றங்களில் மட்டுமல்ல.. வீதிகளிலும் எங்கள் பணி தொடரும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விடுத்திருக்கும் அறிவிப்பில், "கம்யூனிஸ்டுகளுக்கு தேர்தல் களம் என்பதும் மக்களுக்கான போராட்ட கனத்தின் ஒரு அங்கமே ஆகும். சமூக மாற்றத்தை இலக்காக கொண்டவர்கள் என்பதா என்பதால் நீண்ட நெடிய பயணத்தின் ஒரு பகுதியாகவே தேர்தல்களை கருதுபவர்கள்.
மக்களிடம் சென்று மாற்று அரசியல் பற்றிய உரையாடலை நிகழ்த்தினோம். பணபலம், அதிகார பலம் எதுவுமின்றி களம் கண்டோம். அடித்தள உழைப்பாளி மக்களின் நலன்களை கேள்வியாக்கி வருகிற நவ தாராளமயம், இந்தியா முழுவதும் பரப்பப்படும் வெறுப்பு அரசியல், ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தெல்லாம் இடதுசாரிக் கட்சிகளின் கருத்துக்களை எடுத்துரைத்தோம். மக்களை நேசிக்கும் சித்தாந்த பிடிப்பு கொண்டவர்களுக்கு மக்களை சந்திக்கிற ஒவ்வொரு வாய்ப்பும் மகிழ்வை தருவதுதான் என்பதால் நிறைய புதிய தொடர்புகளை எங்களால் ஏற்படுத்த முடிந்துள்ளது. எங்கள் கட்சியின் முன்னணி ஊழியர்களும், இடதுசாரிக் கட்சிகளின் தோழர்களும் - குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் - இணைந்து அயராத பணியை தேர்தல் களத்தில் மேற்கொண்டனர். அவர்களின் உழைப்பிற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் மக்களிடம் நெருங்குவதும், மக்கள் எங்களை நெருங்குவதும் காலம் விதித்துள்ள கடப்பாடு என்ற நம்பிக்கையோடு தேர்தல் களத்தில் இருந்து திரும்பியுள்ளோம். எங்கள் பணி நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மட்டுமல்ல, வீதிகளில் தொடரும். தொழிலாளர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள், நடுத்தர வர்க்கத்தினர். சிறு வணிகர்கள், சிறு தொழில் புரிவோர், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் நலன்களுக்காக எங்கள் பயணம் தொடரும். நம்பிக்கையோடு மக்கள் பணிக்கு எங்களை எதிர்காலத்திலும் அர்ப்பணித்துக் கொள்வோம். மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பா, சுகந்தி அவர்களுக்கும், தாராபுரம் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் அவர்களுக்கும் வாக்களித்த அனைவருக்கும், தேர்தல் களத்தில் அயராது பாடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.பால்) லிபரேசன் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரித்தாக்கிக் கொள்கிறோம். தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ) வேட்பாளர் லக்ஷமணன், மதுராந்தகத்தில் போட்டியிட்டிருந்த சிபிஎம் வேட்பாளர் சுகந்தி இருவருமே வெறுமென 2,000க்குள் தான் வாக்குகளை வாங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கள் பணி நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மட்டுமல்ல, வீதிகளில் தொடரும்; நம்பிக்கையோடு மக்கள் பணிக்கு எங்களை எதிர்காலத்திலும் அர்ப்பணித்து கொள்வோம்" என்று கூறியிருக்கிறார்.