சென்னை: தொகுதி பிரச்சனை குறித்து மனு கொடுக்க வந்தவரை, துணை சபாநாயகர் தாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தவெக ஆட்சி அமைய ஆதரவு கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது x பக்கத்தில்.. "துணை சபாநாயகரை சந்தித்து கோரிக்கையை தெரிவிக்க சென்றவர் தாக்கப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும் ஊடகங்களில் பரவி வரும் செய்தி கவலை அளிக்கிறது. துணை சபாநாயகர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணை போன காவல் ஆய்வாளரும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனரும், பாஜக முன்னாள் தலைவருமான அண்ணாமலை, "மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை. தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு? அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல. பாதிக்கப்பட்ட கார்த்திக் குமாருக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.