கேப் விட்டு மீண்டும் அட்டாக்! தமிழக அரசின் நடவடிக்கைக்கு சிபிஎம் விமர்சனம்! சைலண்ட் மோடில் விஜய்!

  • சென்னை: லட்சக்கணக்கில் அரசு காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்றும், இந்த பணிகளை நிரப்ப அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) வலியுறுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வரவும், முதலமைச்சராக விஜய் பதவியேற்கவும் சிபிஎம் ஆதரவு கொடுத்திருந்தது. இருந்தாலும், தவெக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம் என்றும் சிபிஎம் தனித்து நிற்கிறது. மட்டுமல்லாது தவெக ஆட்சியில் விமர்சனங்களையும் கூர்மையாக வைத்து வருகிறது.

    Advertisement

    நிலைமை இப்படி இருக்கையில், தற்போது அரசு காலிப்பணியிடங்கள் குறித்தும், அதற்கு ஆட்கள் நிரப்பப்படும் முறை குறித்தும் தமிழக அரசுக்கு முக்கியமான வலியுறுத்தலை முன்வைத்திருக்கிறது. கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தமிழ்நாடு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திற்கும் அவுட்சோர்சிங் ஏற்பாடுகளை செய்து தருவதற்கு அயல் மனித வள கழகத்தை நியமித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு எதிர்கால நிரந்தர வேலை வாய்ப்புகளைக் கடுமையாக பாதிக்கக் கூடியது ஆகும்.

    தமிழ்நாடு அரசு காலிப்பணியிடங்கள் 5 லட்சத்திற்கு மேல் உள்ளன. சில ஆயிரம் காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு வருகின்றன. நிரந்தரப் பணி நியமனங்கள் இல்லாமல் மக்கள் சேவை பாதிக்கப்படுவதோடு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

    Advertisement

    'அயல் மனித வள கழகம் (Overseas Manpower Corporation Limited)' என்பது 1978 இல் அயல்நாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் அரசு நிறுவனமாகவே உருவாக்கப்பட்டாலும், 2012 இல் உள்நாட்டு வேலை வாய்ப்புகளுக்காக அவுட்சோர்சிங் ஏற்பாடுகளை செய்யலாமென அதன் செயல் வரம்பு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது.

    2024 இல் தமிழ்நாடு அரசின் அங்கீகரிக்கப்பட்ட அவுட் சோர்சிங் முகமைகளின் பட்டியலில் அது இணைக்கப்பட்டது. தற்போதைய த.வெ.க. ஆட்சியில் அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கான முகமையாக மாற்றப்பட்டுள்ளது. "நெகிழ்வான தொழிலாளர் சந்தை" என்கிற நவீன தாராளமய கோட்பாட்டின் அடியொற்றியே இந்த நகர்வுகள் அமைந்து தற்போது நிரந்தர நியமனங்கள் மீதான முழு வீச்சான தாக்குதலாக மாற்றப்பட்டுள்ளது.

    Advertisement

    அவுட்சோர்சிங் முகமை என்பது சமூக நீதிக்கு எதிரானது. ஒ.பி.சி., எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடுகளை வெறும் காகித அளவிலான ஏற்பாடுகளாக சுருக்கி விடக்கூடியது. "மாதிரி பணியமர்த்துபவராக" (Model Employer) இருக்க வேண்டிய அரசாங்கம் தனியார்களுக்கான "லாப மாதிரியாக" ஆகி விடக்கூடாது.

    கண்ணியமான வேலை வாய்ப்புகள் அற்ற சூழலில் இளைஞர்களின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்பட்டு வருகிறது. த.வெ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் அரசுத்துறை, ஆசிரிய, பொதுத்துறைகளில் 5 ஆண்டுகள் தற்காலிக பணி முடித்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது. ஆனால், அரசின் தற்போதைய முடிவு முற்றிலும் எதிர்த்திசை நோக்கிப் பயணிப்பதாக உள்ளது.

    Advertisement

    அயல் மனித வள கழகம் என்பது அரசு நிறுவனமாக இருந்தாலும், அது பல தனியார் முகமைகள் வாயிலாகவே இந்தப் பணியை நிறைவேற்றப் போகிறது. அவுட்சோர்சிங் ஊழியர்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கும், நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. நியமனங்களில் துவங்கி சம்பளம், சேமநல நிதி, இ.எஸ்.ஐ பயன்கள் உள்ளிட்டு அவுட்சோர்சிங் முகமைகளே பார்த்துக் கொள்ளும். இதனால் அவ்வாறு பணியில் சேரும் ஊழியர்களின் பணி நிலைமைகளுக்கும், பாதுகாப்பிற்கும் அரசு உத்தரவாதம் அளிக்காது.

    ஆகவே, அவுட்சோர்சிங்கிற்கு முழுமையாக வழி வகுக்கிற அயல் மனித வள கழகம் நியமனத்தை ரத்து செய்து, நிரந்தர பணி நியமனங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    CPI(M) Urges Tamil Nadu Govt: The Communist Party of India (Marxist) (CPI(M)) has urged the Tamil Nadu government to address the hundreds of thousands of vacant government posts and to abandon the practice of outsourcing to fill these positions.