“எனது மகனை என் பாதையில் வென்றெடுக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்”.. சுப்பராயன் எம்.பி உருக்கம்!

  • சென்னை: "எனது பாதையில் மகனை வென்றெடுக்க இயலாது போனதற்கு நான் பெரிதும் வருந்துகிறேன்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் எம்.பி சுப்பராயன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி சுப்பராயன் மகன் பாரதி சுப்பராயன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை திமுகவில் இணைந்தார். பாரதி சுப்பராயன், நவீன மனிதர்கள் என்ற அமைப்பின் தலைவராக இருந்து வந்தார். அவர் மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சுப்பராயனின் மகன் திமுகவில் இணைந்தது பெரும் பேசுபொருளானது. இந்நிலையில், சுப்பராயன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து திருப்பூர் எம்.பி சுப்பராயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனது மகன், எனது விருப்பத்திற்கு நேர்எதிரான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது! அவரை எனது பாதையில் வென்றெடுக்க இயலாது போனதற்கு நான் பெரிதும் வருந்துகிறேன்!

    நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதை முற்றிலும் வேறானது!
    நிகழ்கால தனி உடைமை சமூக அமைப்பு முறையைத் தகர்த்து, பொதுவுடைமை சமூக அமைப்பு முறையைக் கட்டுவதற்கான பாதையே எனது பாதையாகும்! இந்தக் கொள்கையே இறுதியில் வெல்லும் என்ற சமூக விஞ்ஞானத்தை உறுதிபட நம்புகிறவன் நான்!

    Advertisement

    அதற்கான எனது பயணம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாதையிலேதான் எனது மூச்சடங்கும் வரை தொடரும்! எனது பொது வாழ்வில் கம்யூனிஸ்ட் நெறிமுறைக்கு மாறாக ஒருபோதும் நடந்ததில்லை! இதை ஒட்டி எழுந்த எல்லா நியாயமான விமர்சனங்களையும் பணிவோடு ஏற்கிறேன்!

    எனது பொது வாழ்க்கை திறந்த புத்தகம்! இதில் மூடுதிரைகள் ஏதும் இல்லை! கமிஷன் இலஞ்ச ஊழல் கூத்தாடுகிற இன்றைய அரசியலில், அவை என்னை அண்ட அனுமதித்தததே இல்லை! எனது பொது வாழ்க்கை குறித்த விளக்கங்களை என்னிடம் எப்போது வேண்டுமானாலும் நேரில் பெறலாம்!

    கட்சிக்காக எதையும் இழக்கத் தயங்க மாட்டேன்! என்னை எந்த இடர்ப்பாடுகளும் நிலை குலைத்ததில்லை! நான் கம்யூனிஸ்ட் என்பதால்!" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    "I deeply regret failing to win my son over to my path," said CPI MP Subbarayan, expressing his emotion. Bharathi Subbarayan, the son of the Tiruppur Lok Sabha MP, joined the DMK in the presence of DMK leader Stalin.