தவெக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த மு.வீரபாண்டியன்.. “தலைகீழாக நடக்கிறது” என அதிருப்தி!

  • சென்னை: குஜிலியம்பாறை வட்டாட்சியர் கம்யூனிஸ்டுகள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டதுஅரசுக்கு தெரியாமல் நடந்த விஷயம் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்.

    Advertisement

    "மக்கள் அதிகாரம் பெற்ற முதலமைச்சர், அமைச்சர்கள்தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும். இங்கு தலைகீழாக இருக்கிறது" என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தவெக ஆதரவு கட்சிகளின் 2ஆம் கட்ட கூட்டம் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் கூட்டணி கட்சி தலைவர்களை தவெக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், ராஜ்மோகன் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

    அந்தவகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியனை, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். மேலும், குஜிலியம்பாறை வட்டாட்சியரின் நடவடிக்கை குறித்து அரசுக்கு தெரியவராதது அதிகாரிகள் செய்த தவறு எனக் கூறி தமிழக அமைச்சர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோரிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    தவெக ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காத நிலையில், 2-வது கூட்டத்தில் பங்கேற்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தி.நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "தவெகவின் நல்லாட்சி, நல்ல திட்டங்களை வரவேற்று ஆதரிப்போம். அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்கவில்லை. மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும்.

    தமிழ்நாட்டில் தலைகீழாக உள்ளது, அதிகாரிகள் வழிநடத்துகிறார்கள். தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை. தவெகவை வெளியில் இருந்தே ஆதரிப்போம், கூட்டணியில் நாங்கள் இடம்பெறவில்லை" என மீண்டும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    Advertisement

    மேலும் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இடதுசாரிகள் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளித்து தவெகவை ஆதரித்தோம். அதேபோல், மக்களாட்சியில் ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக தவெகவை நாங்கள் ஆதரித்தோம். அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கிறோம். அமைச்சரவையில் நாங்கள் இடம்பெறவில்லை. கூட்டணியிலும் நாங்கள் இடம்பெறவில்லை.

    அதே நேரத்தில், வெளியிலிருந்து நாங்கள் ஆதரிக்கிற காரணத்தினாலேயே, சமரசம் இல்லாமல் உழைக்கிற மக்களின் கோரிக்கைகளுக்காக நாங்கள் குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறோம். தமிழக அரசு சில நல்ல நகர்வுகள், நல்ல திட்டங்கள், நல்ல அரசியல் திசையில் அது நகர்கிறபோது, நாங்கள் அதை ஆதரிக்கிறோம்.

    Advertisement

    இப்போதும் நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். அமைச்சரவையில் இடம் பெறுவதில்லை, கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்பதுதான் எங்கள் நிலை. ஆனால், மாநிலத்தை ஆளுகிற ஒரு கட்சி எங்களிடம் சில அரசியல் கருத்துகளைச் சொல்கிறபோது, அதற்கு மதிப்பளித்து, அந்தக் கருத்துகளை கட்சியின் முன்னால் நாங்கள் தெரிவிப்போம்" எனக் கூறியுள்ளார்.

    English Summary

    CPI State Secretary Veerapandian has refused to accept the explanation given by Minister CTR Nirmal Kumar, who claimed that the order issued by the Gujiliyamparai Tahsildar to enumerate Communists was an action taken without the government's knowledge.