தவெக ஆட்சியமைக்க நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கவில்லை” - CPIM பெ.சண்முகம் தடாலடி!

  • சென்னை: "தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் அளிக்கவில்லை. தவெக அரசு என்ன செய்தாலும் ஆதரவு கொடுப்போம் என்ற வாக்குறுதியை நாங்கள் கொடுக்கவில்லை. மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்ப்போம்." என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் அளிக்கவில்லை. தவெக அரசு என்ன செய்தாலும் ஆதரவு கொடுப்போம் என்ற வாக்குறுதியை எல்லாம் நாங்கள் கொடுக்கவில்லை. மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்ப்போம்.

    Advertisement

    மே 8 ஆம் தேதி, தவெக அரசு அமைப்பதற்கு ஆதரவு என நாங்கள் சொன்னபோதும், விஜய் ஆதரவு கேட்டபோதும், அவர் சார்பாக வந்தவர்கள் கேட்டபோதும், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடந்தால் கட்டாயம் எதிர்ப்போம். அது இனிமேலும் தொடரும்" எனத் தெரிவித்தார்.

    மேலும் பேசிய பெ.சண்முகம், "ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் திமுக, அதிமுக இரண்டு ஆட்சியிலும் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டு முறையாக விசாரணை நடைபெறவில்லை. எனவே, அனைத்து புகார்களையும் விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

    கடந்த ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் ஆட்சிக் காலங்களில் புகார் அளிக்கப்பட்டு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? அல்லது புகாரைப் பெற்ற சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அன்றைக்கு இருந்த ஆளுங்கட்சி தரப்பில் இருந்து யார் மூலம் அழுத்தம் வந்தது?

    Advertisement

    இவ்வளவு குழந்தைகளைப் பல்வேறு காலகட்டங்களில் அழைத்து, இதுபோன்ற பாலியல் குற்றங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறார் என்றால், இது மிகப்பெரிய அளவில் பாலியல் மோசடி நடந்திருப்பதற்கான எடுத்துக்காட்டு. இதில் வீரமணி மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார் என்று நம்புவதற்கு வாய்ப்பில்லை. இதில் சம்பந்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள், அன்று அழுத்தம் கொடுத்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் யார்?

    இந்த குற்றத்தை மூடி மறைக்க உதவிய காவல்துறை அதிகாரிகள், அழுத்தம் கொடுத்த அன்றைய ஆட்சியாளர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்பட்டு அனைவரும் தண்டிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “We have not extended unconditional support for TVK to form the government. We did not promise to support the TVK government regardless of its actions. We will oppose any measures that are detrimental to the people,” stated CPIM State Secretary P Shanmugam.