சென்னை: புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து, முதல்வர் விஜய்க்குத் தெரியாமல் அரசாணை வெளியிடப்பட்டதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதல்வர் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது பற்றிய கேள்விக்கு சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பதில் அளித்துள்ளார்.
பொதுவுடமை கவிஞர் தமிழ்ஒளி பிறந்தநாளை ஒட்டி சென்னை திருவல்லிக்கேணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிங்காரவேலர் அறிவகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு சிங்காரவேலர் அறிவகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் பெ.சண்முகம். அப்போது பேசிய அவர், "புதிய தலைமைச் செயலகத்தைப் பட்டினப்பாக்கத்தில் அமைப்பது குறித்து, முதல்வர் இறுதியான முடிவு எதையும் எடுக்கவில்லை என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். முதல்வர் இறுதியான முடிவை எடுக்காமல் எப்படி அரசாணை வெளியானது என்ற சாதாரண கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். அரசாணை எண் 564, சீனிவாசபுரத்தில் தலைமைச் செயலகத்தை அமைப்பது என்கின்ற அரசின் முடிவைத்தான் வெளிப்படுத்துகிறது. முதலமைச்சருக்கே தெரியாமல் அரசாணை வெளிவந்திருக்கிறது என்றால், அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, முதலமைச்சரின் ஒப்புதலோடுதான் வந்துள்ளது என்றால் அது தவறான முடிவு. ஆதவ் அர்ஜுனா சொல்வது ஏற்புடையது அல்ல. ஏனென்றால், அரசாணை வெளிவந்துள்ளது. அரசாணை வெளிவருகிறது என்றால் முதலமைச்சருக்கோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ தெரியாமல் எப்படி வந்திருக்க முடியும்? ஆகவே, முதல்வர் இன்னும் இறுதியான முடிவு எடுக்கவில்லை என்றால், அதை முதலமைச்சரையே சொல்லச் சொல்லுங்கள். சமாளிப்பதற்காகத்தான் ஆதவ் அர்ஜுனா இப்படிக் கூறியுள்ளார்." எனத் தெரிவித்தார். அப்போது கம்யூனிஸ்ட்கள் இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதாக எழுந்த விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எல்லா ஆட்சிக் காலத்திலுமே ஆதரவு, எதிர்ப்பு என்ற இரட்டை நிலைகளை நாங்கள் எப்போதுமே மேற்கொண்டிருக்கிறோம். மக்களுக்குச் சாதகமான திட்டங்களையோ, சட்டங்களையோ அரசு அறிவிக்கிறபோது மனப்பூர்வமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றிருக்கிறது. மக்களுக்கு எதிரானது, மக்களுக்குப் பாதகமானது, தமிழ்நாட்டுக்கு விரோதமானது என்று சொன்னால் உறுதியாக நாங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்திருக்கிறோம். எல்லா ஆட்சிக் காலத்திலும் இதுதான் எங்களுடைய அணுகுமுறை. தமிழக வெற்றி கழகத்தில் இருக்கும் பல்வேறு தலைவர்கள் எங்களுடைய அணுகுமுறை என்ன என்பது புரியாத காரணத்தால் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இந்த அணுகுமுறை தொடரும். அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்பதற்காக எங்களுடைய அணுகுமுறையை நாங்கள் மாற்றிக்கொள்ள மாட்டோம். ஆதரவு, எதிர்ப்பு, இடித்துரைப்பது, எடுத்துரைப்பது எல்லாம் தொடரும்" என்றார். மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த பெ.சண்முகம், "வேட்பாளர்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் இருக்கிறது என்று சொல்லி காவல்துறைக்கு தகவல் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனென்றால் அதைப்பற்றிய விவரங்கள் தெரியவில்லை. ஆனால் பல இடங்களில் வேட்பாளர்கள் பொதுமக்களால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள் என்கிற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு முக்கியமான காரணம், ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டு திரும்பவும் அதே பதவிக்கு போட்டியிடுகிறார்கள். எதற்காக ராஜினாமா செய்தார்கள், திரும்ப எதற்காக இதே பதவியை அடைய வேண்டும் என்று துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. 20 நாளில் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தலில் நிற்கிறார்கள் என்கிற கோபத்தில் பொதுமக்கள் பல இடங்களிலும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்" என்றார்.