ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் ஆபத்து! விவசாய மானியங்கள் ரத்தாகும்! மார்க்சிஸ்ட் வார்னிங்!

  • சென்னை: ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகி கனகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் விவசாயிகளுக்கு கிடைக்கக் கூடிய மானியங்களும் ரத்து செய்யப்படும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருக்கக் கூடிய எல்லா மாநகராட்சிகளிலும் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தை முற்றிலும் தனியார்மயமாக்குவதற்காக கடைசி முயற்சியின் தோற்றம் இது என நான் சொல்கிறேன்.

    Advertisement

    இதுவரை தமிழகத்தில் தனியாரும் அரசின் பங்களிப்போடு ஒரு மின்நிலையத்தை உருவாக்கவில்லை. ஆனால் இந்த அரசு என்ன செய்கிறது என்றால் தூத்துக்குடியில் 1600 மெகா வாட், எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் ஆகிய இரண்டையும் தனியார் - அரசு பங்களிப்புடன் நடத்த போகிறார்கள்.

    இதனால் தூத்துக்குடி மின் நிலையம் முழுவதும் தனியார்மயமாகும். தனியார் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மின் கடத்துவது (transmission) தமிழகத்தில் இதுவரை அரசிடம் தான் இந்த பணி இருக்கிறது. இப்போது கோயமுத்தூர்- அரியலூர் வரை மின்சார உள்கட்டமைப்பு அமைத்தல், பசுமை மின் உற்பத்தியில் தனியார் பங்களிப்பு உள்ளது. அது போல் பட்ஜெட்டில் வேறு மூன்று அம்சங்களும் சொல்லியிருக்கிறார்கள்.

    Advertisement

    பேட்டரியை வைத்து மின்சாரத்தை சேமிப்பது, 20 ஆயிரம் இவி வாகன சார்ஜிங் நிலையங்கள், ஸ்மார்ட் மீட்டர் ஆகியவை தனியார்வசம் ஒப்படைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்.

    ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் டெண்டர் எல்லாம் போட்டார்கள். எல்லாரும் எதிர்த்தனர். இதனால் திமுக அரசு அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டது. தற்போது அந்த ஸ்மார்ட் மீட்டரையே ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டராக கொண்டு வருகிறார்கள்.

    இந்த ஸ்மார்ட் மீட்டரை மாற்றுபவர் தனியாராக இருப்பார். ஸ்மார்ட் மீட்டர் ப்ரீபெய்டில் மாலை 6 மணி முதல் இரவு 10 வரை நாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறோம் என்பதை பார்த்து கூடுதலாக சார்ஜ் செய்வதற்கு வாய்ப்பு கொடுக்கும். ப்ரீபெய்டு வைத்திருப்போர், அதானி, டாடா என மாறி மாறி மின்சாரத்தை வாங்குவார்கள்.

    Advertisement

    இதனால் நெசவாளர்கள், விவசாயிகளுக்கான மானியங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும். உற்பத்தி, மின் கடத்துவது, விநியோகம், வருவாய் என்ற 4 பிரிவுகளில் தற்போது தனியார், வருவாய் வரை வந்துவிட்டார்கள். இது இதுவரை இல்லாத ஒன்று. இது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கை. இதை தமிழக அரசு கைவிட வேண்டும். இதை கைவிட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் உரக்க குரல் கொடுக்க வேண்டும். இப்போது விட்டால் மின்சாரம் தனியாருக்கு போவதை தடுக்கவே முடியாது. இவ்வாறு கனகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    English Summary

    CPM Kanagaraj warns and opposes for prepaid smart meter scheme which is taken by TVK government.