பழனி கோயில் மோசடி.. செல்வாக்குமிக்கவர்கள் தொடர்பு.. சண்முகம் சரமாரி குற்றச்சாட்டு

  • சென்னை: தவெக ஆட்சியில் ஊழல், லஞ்சமற்ற ஆட்சி வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். பழனி கோயில் நில மோசடி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியில் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் தவெக அமைச்சருக்கும் தொடர்புள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் பழனி கோயில் விவகாரம் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. ஆனால் இதில் அமைச்சர்களுக்கு தொடர்பில்லை என்று சண்முகம் கூறியுள்ளார்.

    Advertisement

    சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பழனி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது. பத்திரப்பதிவு மோசடி நடந்துள்ளது. இதில் கீழ் இருந்து மேல் வரை பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் வந்துள்ள விவரங்களில் பத்திரப்பதிவு அதிகாரிகள், செல்வாக்குமிக்க பிரமுகர்கள் எல்லோரும் சம்பந்தப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளிவந்துள்ளது.

    Advertisement

    பழனி கோயில் நிலம் மோசடி

    பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராக இருடநாலும், அவர்கள் எவ்வளவு பெரிய முக்கியமான பிரமுகராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த வழக்கில் நீதிமன்றத்தை கூட ஏமாற்றியுள்ளனர். ஏற்கனவே உள்ள வழக்குகளை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மிகப்பெரிய மோசடி செய்துள்ளனர்.

    அநேகமாக தமிழகத்தில் நடந்துள்ள மிகப்பெரிய மோசடி என்று சொல்வேன். இதில் பலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். சிபிசிஐடிக்கு வழக்கு விசாரணை ஒதுக்கப்பட்டுள்ளது. அது முறையாகவும், நேர்மையாகவும் விசாரணை நடைபெற வேண்டும். மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். இது இந்த ஆட்சி வந்தவுடன் நடந்துள்ளது என்பதால், இதில் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

    Advertisement

    அமைச்சருக்கு தொடர்பில்லை

    அந்த மாதிரி எந்த விபரங்களும் வரவில்லை. பத்திரப்பதிவு துறை நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளனர். தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை ஒவ்வொரு நாளுக்கு ஒரு அதிகாரியை கொண்டு வந்து நியமித்து பத்திரப்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு மோசடி நடந்துள்ளது. எனவே அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை வந்துள்ள விபரத்தில் அமைச்சர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை.

    அதனால் தான் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கைக்கு முனைப்பாக செயல்பட்டுள்ளார். இதை மிகப்பெரிய மோசடி என்று சொல்லிவிட்டோம். இனியும் தனித்தனியாக இதைப்பற்றி பேச வேண்டியதில்லை. இதில் அரசு அதிகாரிகள் பலருக்கு தொடர்புள்ளது. சம்பந்தப்பட்டுள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை" என்றார்.

    English Summary

    CPM Shanmugam: CPM Secretary Shanmugam said, Top officials and influence people involved in Palani temple land scam.