கிரெடிட் கார்டில் பணம் அவுட்டா? கவலையை விடுங்க.. 5 நாளில் ரீஃபண்ட் செய்ய ஆர்பிஐ அதிரடி உத்தரவு

  • சென்னை: ஆன்லைன் உலகம் எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அதே வேகத்தில் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. நமக்கு தெரியாமலேயே நமது கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும் சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நிம்மதி தரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடியான புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அத்தனையும் எளிமையாக வந்துவிட்டாலும், மக்களுக்கு ஒருவித பயம் இந்த பணப்பரிவர்த்தனையில் இருக்கத்தான் செய்கிறது..

    Advertisement

    அதனால்தான், மக்கள் பயமில்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே, வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக, புதிய விதிகளை ரிசர்வ் வங்கி இப்போது வெளியிட்டுள்ளது.

    டிஜிட்டல் பரிவர்த்தனைகள்

    அதன்படி, வங்கிகள் தங்களது தொழில்நுட்ப அமைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு முழு பாதுகாப்பு தரும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்றும், மோசடிகளைத் தடுக்க தகுந்த பாதுகாப்பு அம்சங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இனிமேல் 500 ரூபாய்க்கு மேல் உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது பரிவர்த்தனை நடந்தாலோ, உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட வேண்டும். அந்த மெசேஜில் பரிவர்த்தனை நடந்த தேதி மற்றும் நேரம் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

    Advertisement

    வங்கிக் கணக்கு - மோசடி

    ஒருவேளை உங்கள் அக்கவுண்ட்டில் உங்களுக்கே தெரியாமல் ஏதாவது மோசடி நடந்துவிட்டது என்று நீங்கள் வங்கிக்குத் தகவல் கொடுத்தால், வங்கிகள் உடனடியாக செயல்பட வேண்டும். மேலும், அந்த கணக்கில் இருந்து எந்தவொரு ஆன்லைன் பரிவர்த்தனையும் நடக்காதவாறு கணக்கை முடக்கும் அதிரடி நடவடிக்கையை வங்கிகள் உடனடியாக எடுக்க வேண்டும்.

    இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வங்கியின் அலட்சியம் காரணமாகவோ அல்லது வங்கியின் டெக்னிக்கல் குறைபாடு காரணமாகவோ உங்கள் பணம் திருடு போனால், அதற்கு நீங்கள் பொறுப்பல்ல. நீங்கள் புகார் செய்யாவிட்டாலும் கூட, இழந்த முழு தொகையையும் திரும்பப் பெற உங்களுக்கு முழு உரிமை உள்ளது.

    Advertisement

    கிரெடிட் கார்டுகள்

    அதேபோல, வங்கியின் மீதோ அல்லது உங்கள் மீதோ தப்பு இல்லாமல், ஏதாவது 3ம் தரப்பு நபர்கள் மூலமாக மோசடி நடந்திருந்தால், அந்த சம்பவம் நடந்த 5 நாட்களுக்குள் நீங்கள் வங்கிக்குத் தகவல் கொடுத்துவிட வேண்டும். அப்படித் தெரிவிக்கும் பட்சத்தில், உங்களுடைய பணத்தை நீங்கள் முழுமையாகத் திரும்பப் பெற்றுவிடலாம்.

    அதிலும் கிரெடிட் கார்டுகளில் மோசடி நடக்கும்போது, நீங்கள் புகார் கொடுத்த 5 நாட்களுக்குள் அந்தத் தொகையை வங்கி உங்களது கணக்கில் தற்காலிகமாக வரவு வைத்துவிட வேண்டும். இதனால், மோசடி பணத்திற்காக உங்களுக்கு வட்டி போடுவது அல்லது தாமதக் கட்டணம் வசூலிப்பது போன்ற பிரச்சனைகள் முற்றிலும் தடுக்கப்படும்.

    Advertisement

    வட்டி, அபராதக் கட்டணங்கள்

    வங்கி வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பைத் தரப்போகும் இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் 2027ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளன..!

    இந்த அதிரடியால், வட்டி மற்றும் அபராதக் கட்டணங்கள் எதுவும் இல்லாமல் இழந்த பணம் பாதுகாப்பாக வாடிக்கையாளர்களுக்கு திரும்பக் கிடைக்கும்... அதுமட்டுமல்ல, 500 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை நடந்தாலே உடனே எஸ்எம்எஸ் அலர்ட் வந்துவிடுவதால், மோசடி நடந்த கணக்கை உடனடியாக முடக்கி அடுத்தடுத்த திருட்டுகளைத் தடுத்துக் கொள்ளும் வசதியும் ஏற்படுகிறது.

    English Summary

    Credit Card Money Lost? RBI Orders Banks to Process Refunds Within 5 Days Under New Rule