சென்னை: நியாயமான போராட்டங்களை கூட முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக காவல்துறை ஒடுக்குவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுகின்றன. இப்படி இருக்கையில், நேற்று சென்னையில் நடந்த மாணவர் போராட்டத்தில் போலீசார் தாக்கியதில் +2 மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பிபிசி தமிழ் செய்தி ஊடகம் விரிவாக பதிவு செய்திருக்கிறது.
தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று போராட்டம் நடந்திருந்தது. இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக சென்னையிலும் போராட்டம் நடந்தது.
இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகள் இந்த போராட்டத்தை நடந்தின. நேற்று காலை சரியாக 10:30 மணியளவில் அரசினர் தோட்டத்திலிருந்து தலைமை செயலகம் வரை பேரணியாக செல்ல 50க்கும் மேற்பட்ட மாணவர்களும், இளைஞர்களும் முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி திருவல்லிக்கேணி போலீசார், கைது செய்தனர். இந்த சம்பவத்தின்போது +2 மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாக இடதுசாரி மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களையும், இளைஞர்களையும் போலீசார் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர். அங்கு சென்று போராட்டக்காரர்களிடம் பிபிசி செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தென்சென்னை மாவட்ட செயலாளர் கூறியதாவது, "ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினோம். ஆனால் போலீசார் தடுப்பரண்களை அமைத்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். பெண் காவலர் ஒருவர் சாவியை வைத்து எங்கள் முழங்கைக்கு பின்புறம் தாக்கினார். மாணவர் ஒருவரின் தலையிலும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்" என்று பிபிசி செய்தியாளரிடம் கூறியிருக்கிறார். நாங்கள் அமைதியான முறையில்தான் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். ஆனால், திருடர்களை போல காவல்துறையினர் எங்களை கையாளுகின்றனர். போராடும் உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுத்திருக்கிறது. அதை மறுக்கும் வேலையை காவல்துறை செய்கிறது என்றும் குற்றம் சாட்டியிருப்பதாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, போராடுபவர்களை கைது செய்வது, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது உள்ளிட்ட வேலைகளை தமிழ்நாடு போலீஸ் தொடர்ந்து செய்து வருகிறது என்று ஏற்கெனவே விமர்சனங்கள் இருக்கின்றன. இப்படி இருக்கையில், தற்போது இடதுசாரி அமைப்பான அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வைத்திருக்கும் குற்றச்சாட்டு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக இதேபோல தர்மேந்திர பிராதானுக்கு எதிராக நடந்த CJP போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் இடதுசாரி மாணவர்கள், இளைஞர் அமைப்பினர் போராட்டம் நடத்தியிருந்தனர். நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் தவெக அரசு, இந்த போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும்.. போராட்டத்தில் பங்கெடுக்கும் என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். ஆனால், போராடியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுபோன்ற போராட்டங்களில் கைது செய்யப்படுபவர்கள் மண்டபங்களில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள். ஆனால், இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மட்டுமல்லாது அடுத்தடுத்த போராட்டங்களுக்கும் தவெக அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் கேள்வி எழுப்பின. பின்னர்தான் போராட அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார். இப்படியாக ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் போதும் அதற்கு எதிராக காவல்துறையை பயன்படுத்துவது தவெக அரசு மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது.இடதுசாரி மாணவர் அமைப்பினர் குற்றச்சாட்டு
தலையில் தாக்குதல்
உரிமையை மறுக்கும் போலீஸ்
முக்கியமான குற்றச்சாட்டு
தவெக அரசின் செயல்பாடுகள்
உஷாராக இருக்கனும்