மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக

  • சென்னை: தமிழகத்தில் பயிர்க் கடன் தள்ளுபடி விவகாரம் நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன் "அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்" என்று வாக்குறுதி அளித்திருந்த தமிழக வெற்றிக் கழக அரசு, தற்போது ரூ.2,044 கோடி மதிப்பிலான பயிர்க் கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளது. இதனால், "முழு கடன் தள்ளுபடி எங்கே?" என்று விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.

    Advertisement

    ஆனால், இந்த விவகாரத்தின் பின்னால் சாதாரண பிரச்சினைகள் மட்டுமல்ல, நபார்டு வங்கியின் கடுமையான நிபந்தனைகளும் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதான் தவெக அரசை சிக்கலில் சிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழகத்தில் பயிர்க் கடன் தள்ளுபடி என்பது இன்றே நேற்றோ நடக்கும் புதிய விஷயம் அல்ல. கடந்த பல ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் நேரங்களில் விவசாயிகளின் வாக்குகளை கவரும் முக்கிய ஆயுதமாக இதைப் பயன்படுத்தி வந்துள்ளன.

    பயிர்க் கடன் தள்ளுபடி

    ஆட்சிக்கு வந்ததும் கடன் தள்ளுபடி அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 24 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவை மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கூட்டுறவு வங்கி அமைப்புகளின் முதுகெலும்பாக இருப்பது நபார்டு வங்கிதான்.

    Advertisement

    நபார்டு

    கடந்த காலத்தில் கூட்டுறவு வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியபோது, வாஜ்பாய் ஆட்சிக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு வைத்யநாதன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மறுசீரமைப்பு நிதி வழங்கியது. ஆனால் அதற்காக மாநில அரசுகள் நபார்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அரசியல் காரணங்களுக்காக கட்டுப்பாடில்லாமல் கடன் தள்ளுபடி அறிவிக்கக்கூடாது என்பதுதான்.

    கருணாநிதி - ஜெயலலிதா

    இதை ஏற்க மறுத்ததால்தான் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா நபார்டுடன் மோதியதாக கூறப்படுகிறது. பின்னர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இதற்குப் பிறகும் தமிழகத்தில் கடன் தள்ளுபடிகள் தொடர்ந்தன. 2006-ல் கருணாநிதி அரசு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது. பின்னர் 2016-ல் ஜெயலலிதா ரூ.5,318 கோடி கடன்களை தள்ளுபடி செய்தார். 2021 தேர்தலுக்கு முன் எடப்பாடி பழனிசாமி ரூ.12,110 கோடி விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்தார்.

    Advertisement

    ஸ்டாலின்

    ஆனால் ஆட்சி மாறியதால் அந்த சுமை ஸ்டாலின் அரசின் தலையில் விழுந்தது. பின்னர் திமுக அரசு அந்த கடன்களை தள்ளுபடி செய்து வங்கிகளுக்கு தொகை வழங்கியது. ஆனால், இங்கேதான் முக்கியமான சிக்கல் இருக்கிறது. அரசு கடன் தள்ளுபடி அறிவித்தவுடன், அந்த தொகையை உடனடியாக கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குவதில்லை. பல ஆண்டுகள் தவணை முறையில் கொடுக்கப்படும். இதனால் வங்கிகளுக்கு வட்டி இழப்பு ஏற்படும். கூட்டுறவு வங்கி அமைப்புகள் பாதிக்கப்படும்.

    கடன் தள்ளுபடி

    இதற்குத்தான் கடந்த ஆண்டு நவம்பரில் நபார்டு புதிய கடுமையான விதிமுறைகளை கொண்டு வந்தது. அதன்படி, "நபார்டின் அனுமதி இல்லாமல் மாநில அரசுகள் கடன் தள்ளுபடி அறிவிக்கக்கூடாது. அப்படி அறிவித்தாலும், 60 நாட்களுக்குள் முழு தொகையையும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டும்" என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையால்தான் தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையான கடன் தள்ளுபடியை அறிவிக்க தயங்குவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழக அரசு

    காரணம், முழு பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டுமெனில் பல ஆயிரம் கோடி ரூபாயை குறுகிய காலத்தில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். தற்போது தமிழக அரசின் நிதிநிலை அதற்கு சாதகமாக இல்லையென்பதும் அதிகாரிகள் தரப்பில் பேசப்படுகிறது. இதனால்தான் தவெக அரசு தற்போது பகுதி அளவிலான தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    விவசாயிகள் அதிருப்தி

    ஆனால் தேர்தல் வாக்குறுதியில் "முழு தள்ளுபடி" என்று கூறிவிட்டு தற்போது "பகுதி தள்ளுபடி" செய்வது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், திமுக இந்த முறை தேர்தல் அறிக்கையில் முழுமையான கடன் தள்ளுபடி வாக்குறுதியை தவிர்த்ததற்கும் இதுவே காரணம் என கூறப்படுகிறது. நபார்டின் புதிய விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்ததால் தான் திமுக எச்சரிக்கையாக நடந்துகொண்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    NABARD rules and financial pressure put Vijay government in trouble over partial crop loan waiver announcement.