ஏக்கர் கணக்குல வதந்தி பரப்பாதீங்க.. தோனி அப்படி ஒன்றும் கேட்கவில்லை! நேரடியாக சொன்ன காசி விஸ்வநாதன்

  • சென்னை: சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை தோனி கேட்டதாக பேசப்பட்டு வந்த சூழலில், அதுதொடர்பாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். தோனி பங்குகளை கேட்டது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று கூறிய காசி விஸ்வநாதன், அடுத்த சீசனில் தோனி விளையாட மாட்டேன் என்பதை இதுவரை சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கடந்த சில மாதங்களாகவே சிஎஸ்கே அணி தொடர்பாக பல்வேறு தகவல் வெளியாகி வருகிறது. முதலில் சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத்தை கொடுத்துவிட்டு மும்பை அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்க போவதாக சொல்லப்பட்டது. பின்னர் ஸ்டீபன் ஃபிளமிங் மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் இடையில் மோதல் காரணமாக, அவர் பதவி விலகியதாக கூறப்பட்டது.

    Advertisement

    ஆனால் ஃபிளமிங் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் பதவியை ஏற்க முடிவு செய்ததால், சிஎஸ்கே அணியில் இருந்து விடைபெற்றார். கலீல் அஹ்மத் மற்றும் சிவம் துபே இருவரும் சிஎஸ்கே மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக பேச்சுகள் எழுந்தன. அதில் சிஎஸ்கே நிர்வாகம் மறுத்தது.

    இதன் உச்சமாக சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை தோனி வாங்க விரும்பியதாகவும், அதற்கு அணி நிர்வாகம் 4% பங்குகளை மட்டுமே கொடுக்க முன் வந்ததாக சொல்லப்பட்டது. இறுதியாக தோனி 18.5% கேட்டதாகவும், சிஎஸ்கே நிர்வாகம் 5.5% பங்குகள் தான் இறுதி என்று கூறிவிட்டதாக சில தகவல் வெளி வந்தன.

    Advertisement

    இதனால் சிஎஸ்கே அணி உடனான தோனியின் உறவு முடிவுக்கு வந்துவிட்டது என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி காசி விஸ்வநாதன் பேசுகையில், தோனி பங்குகளை கேட்டதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்ற ஒரு வதந்தி.

    அதேபோல் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்பது தொடர்பாக அவர் தான் முடிவு செய்ய வேண்டும். இதுவரை அவரிடம் இருந்து நோ என்ற பதில் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தோனி 45 வயதை எட்டிவிட்ட சூழலில், கடந்த சீசனிலேயே ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இதனால் இந்த சீசனில் தோனி ஓய்வை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    English Summary

    CSK: MS Dhoni Buying 25% CSK Stake Is Baseless Rumor, Clarifies CEO Kasi Viswanathan