CTR நிர்மல்குமார் அதிரடி.. இனி யாரும் 25 லட்சம் லஞ்சம் கொடுக்க தேவையில்ல.. ஊழல் செய்தவர்கள் சிக்குவார்கள்!

  • தமிழ்நாடு மின்சாரத்துறையில் கடந்த ஆட்சியில் பெரிய அளவிலான ஊழல் நடைபெற்றதாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார் கடும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

    Advertisement

    தனியார் மின் உற்பத்தியாளர்கள் ஒரு மெகாவாட் உற்பத்திக்கு 25 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இனி யாரும் அப்படி லஞ்சம் கொடுக்க தேவையில்லை என்றும், ஊழல் செய்தவர்கள் விரைவில் சிக்குவார்கள் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும் DVAC மூலம் ஊழல்களை உறுதி செய்யப்பட்ட பின்பு கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார் அமைச்சர் நிர்மல்குமார்.

    Advertisement

    CTR நிர்மல்குமார் அதிரடி..

    செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முந்தைய ஆட்சிக் காலத்தில் மின்சாரத் துறையின் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் கொள்முதல் செயல்முறைகளில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    குறிப்பாக தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் திட்ட அனுமதி மற்றும் செயல்பாடுகளுக்காக அதிகளவு லஞ்சம் வழங்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    தனியார் மின் உற்பத்தியாளர்கள் வெறும் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான அனுமதியைக் கோரி விண்ணப்பம் (Application) சமர்ப்பிக்க வேண்டும் என்றாலே, அதற்கு தலா 25 லட்ச ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாய நிலை இருந்தது.

    Advertisement

    கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 லட்சம் ரூபாய் கொடுக்காமல் எந்தவொரு சோலார் திட்டமும் உள்ளே வந்திருக்க முடியாது. இந்தத் தொகையைக் கொடுத்துவிட்டுக் காத்திருப்பவர்கள் மட்டும் இன்றைக்கு ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இது விண்ணப்பத்திற்கு மட்டும்தான், அதன்பிறகு கமிஷன், இறுதியில் மின்சாரக் கட்டமைப்பை இணைக்கும் கனெக்டிவிட்டி (Connectivity) வழங்கும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் பணம் சுரண்டப்பட்டுள்ளது என்று அமைச்சர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

    ஊழல் செய்தவர்கள் தப்ப முடியாது!

    மின்சாரத் துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். இத்துறையின் முன்னாள் அமைச்சர் முதல் இத்துறையில் இருந்த அனைவரின் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

    Advertisement

    அதே நேரத்தில், வெறும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மட்டுமல்லாமல், அவற்றுக்கு பின்னால் இருந்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. மின்துறையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்த உண்மை நிலை வெளிச்சத்துக்கு வர வேண்டுமென பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    '10 நாட்களில்' புதிய டிரான்ஸ்பரண்ட் போர்ட்டலும்

    இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் நேர்மையான மற்றும் தூய்மையான முதலீட்டுச் சூழல் உருவாக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இனிமேல் யாரும், எங்கேயும், யாருக்கும் ஒரு மெகாவாட்டுக்கு 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை.

    Advertisement

    முறையான நல்ல முதலீட்டாளர்கள் (Investors) உள்ளே வர வேண்டும். தமிழ்நாட்டில் சோலார் மின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்காக, சோலார் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு முற்றிலும் வெளிப்படையான முறையில் அனுமதி வழங்க 'டிரான்ஸ்பரண்ட் போர்ட்டல்' (Transparent Portal) ஒன்று இன்னும் 10 நாட்களுக்குள் தயார் செய்யப்படவுள்ளது.

    முதலமைச்சரின் ஒப்புதலோடு இந்த இணையதளம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே மிக நேர்மையாகப் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். இதன் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, சூரிய ஒளி மின்சாரத்தின் கொள்முதல் விலையும் கணிசமாகக் குறையும்.

    Advertisement

    ரூ.2.5 லட்சம் கோடி கடன் சுமை

    தமிழக மின்சார வாரியம் கடந்த இருபது ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், தற்போது சுமார் ரூ.2.5 லட்சம் கோடி கடன் சுமையை எதிர்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சூழலில், மின்துறையின் உண்மையான நிதிநிலை, கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வருவாய் இழப்புகள், திட்டச் செலவுகள் மற்றும் நிர்வாக முடிவுகளின் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வு அவசியம் என அரசு கருதுகிறது. அதற்காகவே மின்சார துறைக்கென தனி வெள்ளை அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும் கூறினார் அமைச்சர் நிர்மல்குமார்.

    வெள்ளை அறிக்கையில் என்ன வெளியாகும்?

    கடந்த வாரமே தமிழக மின்சாரத் துறையின் கடந்த ஐந்து ஆண்டுகால செயல்பாடுகள் தொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த அறிக்கையில் மின்சார வாரியத்தின் நிதிநிலை, அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புகள், முக்கிய கொள்முதல் நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து விரிவான தகவல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக டிரான்ஸ்பார்மர் கொள்முதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள், மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்ட விவரங்கள் இதில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

    மின்துறையில் சீர்திருத்தத்துக்கான முன்னோட்டமா?

    மின்சாரத் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதும், நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவதும் தற்போதைய அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனுடன், தகுதியான நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டமும் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மின்சாரத் துறையில் 44,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC), குற்றப்பிரிவு மற்றும் சிபிஐ ஆகியவற்றின் விசாரணையில் உள்ளன.

    இந்த நிலையில், வெள்ளை அறிக்கை வெளியான பிறகு கடந்த கால நிதி நிர்வாகம், கொள்முதல் நடைமுறைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மின்துறையில் முன்வைக்கப்பட்டுள்ள லஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் நடவடிக்கை எடுக்கப்படுமா, அல்லது அவை அரசியல் விவாதமாகவே முடிவடையுமா என்பதுதான் தற்போது கவனிக்கப்படும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

    செந்தில் பாலாஜி

    இதேவேளையில் இன்று காலை சென்னையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு போலீசார் வந்த நிலையில் விசாரணை மேற்கொண்டனர். செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு ஆட்சேர்க்கைக்கு லஞ்சம் பெற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருகிறது. செந்தில் பாலாஜி அவரது வீட்டில் இல்லாத காரணத்தால் அவர் வீட்டுக்கு சென்ற கரூர் போலீஸ் படையினர் திரும்பிச்சென்றனர்.

    English Summary

    Electricity Minister CTR Nirmal Kumar has alleged that private power producers were forced to pay ₹25 lakh bribe per MW during the previous DMK government. He announced that a transparent online portal will be launched within 10 days to eliminate middlemen and corruption in solar and renewable energy project approvals.