“ராஜஸ்தானில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46”.. பாஜக பக்கம் திருப்பி விட்ட சிடிஆர் நிர்மல்குமார்.. ஆனால்!

  • சென்னை: ராஜஸ்தானில் ஒரு யூனிட் ரூ.46 மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது மத்திய பாஜக அரசின் திட்டமிடல் தோல்வி என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். மின்சாரம் ஒரு யூனிட் ரூ.35க்கு தவெக அரசு கொள்முதல் செய்து விமர்சனங்களை எதிர்கொண்டிருந்த நிலையில், ரூ.46க்கு வாங்கிய ராஜஸ்தானை குறிப்பிட்டுச் சாடியுள்ளார் நிர்மல்குமார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, மாநிலம் முழுவதும் பல மணி நேர மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டு வந்தது. மத்திய மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி குறைவு காரணமாக ஏற்பட்ட மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக ரூ.37 வரை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது.

    Advertisement

    ஒரு யூனிட் ரூ. 35 எனும் விலையில் சுமார் 1,000 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். ஏன் இவ்வளவு அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு மின் கொள்முதல் செய்கிறது என அரசியல் கட்சியினர் பலரும் கேள்விகளை எழுப்பி வந்தனர். அண்டை மாநிலமான ஆந்திரா குறைந்த விலையில் மின்சாரம் வாங்கும்போது, தமிழ்நாடு அரசு, நிலைமையை முன்கூட்டியே கணிக்காமல் கோட்டை விட்டது ஏன் என விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 330 மெகாவாட் திறன் கொண்ட தோல்பூர் எரிவாயு மின் நிலையத்தில், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு யூனிட் மின்சார உற்பத்திச் செலவு ரூ.46.09 வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "ராஜஸ்தான் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூபாய் 46.09 செலவிடுவதாக ஆங்கில நாளேட்டின் கட்டுரை கூறுகிறது. இது மத்திய அரசின் தேசிய தேவை முன்னறிவிப்பு மற்றும் போதுமான திட்டமிடல் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

    நாடு முழுவதும் மின்சாரத் தேவை மற்றும் உற்பத்தி கிடைக்கும் நிலவரம் குறித்த தகவல்களை மாநில அரசுகளைவிட மத்திய மின்துறை அமைப்புகள் விரிவாக அறிந்திருக்கக்கூடிய சூழலில், இத்தகைய மின்சாரப் பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து திட்டமிடாதது ஏன்? இத்தகைய தேவை- விநியோக இடைவெளிகள் ஏன் முன்கூட்டியே கணிக்கப்பட்டு திட்டமிடப்படவில்லை என்பதை மத்திய மின்சார அமைச்சகம் ஆராய வேண்டும்.

    Advertisement
    “தனுஷ் வருகையால் பயமா? யார் வந்தாலும் 30-40 வருசத்துக்கு விஜய் தான் CM” - அமைச்சர் CTR நிர்மல்குமார்

    குறைந்தபட்சம் இப்போதாவது, மத்திய மின்சார அமைச்சகம் தேசிய அளவிலான முன்னறிவிப்பு மற்றும் மாநிலங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு குறித்து திட்டமிட வேண்டும். இது எதிர்காலத்தில் மாநிலங்கள் இதுபோன்ற கட்டுக்கடங்காத விலையுள்ள மின்சாரத்தைத் தவிர்க்க உதவும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மின்சாரம் ஒரு யூனிட் ரூ.35க்கு தவெக அரசு கொள்முதல் செய்து விமர்சனங்களை எதிர்கொண்டிருந்த நிலையில், ரூ.46க்கு வாங்கிய ராஜஸ்தானை குறிப்பிட்டுச் சாடியுள்ளார் தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்.

    சிடிஆர் நிர்மல்குமாரின் இந்தக் கருத்தை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். "ராஜஸ்தான் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூபாய் 46 விலையில் வாங்கியதாக அந்தக் கட்டுரை எங்கும் கூறவில்லை. மாறாக, ஒரு எரிவாயு மின் நிலையத்தில் மின் உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டிற்கு ரூ.46 ஆக உயர்ந்திருந்தது என்றுதான் அது குறிப்பிடுகிறது.

    Advertisement

    ராஜஸ்தான் தோல்பூர் மின் நிலையத்திலிருந்து மின்சாரத்தைப் பெறுகிறது என்பதற்காக, அது அந்த விலையைச் செலுத்தியது என்று அர்த்தமல்ல. மின் உற்பத்திச் செலவையும், கொள்முதல் விலையையும் குழப்புவதை நிறுத்துங்கள்." என நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu Electricity Minister CTR Nirmal Kumar has alleged that the procurement of electricity at a cost of Rs. 46 per unit in Rajasthan is a failure in the planning of the BJP-led union government.