கர்நாடகா ஒற்றுமையா இருக்கு! ஆனா நம்ம தமிழ்நாட்டுல! வேதனையுடன் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்

  • மதுரை: கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக்கூடாது என்ற ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள், கர்நாடகாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும், தமிழக அரசின் முயற்சிகளுக்கு எதிராகவும் செயல்படுகின்றன எனவும், கர்நாடகாவில் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று அங்குள்ள அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. அதைத் தாண்டி, நம்முடன் இருக்க வேண்டிய சில அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாக இங்கே செயல்படுவது வருத்தமான செயல் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மேலும்,

    Advertisement

    மதுரை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.. நிலுவையில் உள்ள 17 டிஎம்சி நீரையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நிர்மல் குமார், காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை, அனைத்துக் கட்சிக் கூட்டம், மின்கட்டணம், வேளாண் மின் இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    சிடிஆர் நிர்மல்குமார்

    அப்போது பேசிய அவர்," தற்போது கர்நாடகா தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ள நீர் சுமார் 4.5 டிஎம்சி மட்டுமே என்றும், கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 17 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழு (Cauvery Regulation Committee) பரிந்துரைத்தபடி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை முழுமையாக பெற்றுத்தரவும், தமிழகத்தின் நீருரிமையை நிலைநாட்டவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர அரசு முடிவு செய்துள்ளது.

    Advertisement

    காவிரி பிரச்சினை

    மேகதாது அணை, காவிரி மேலாண்மை வாரியம், நிலுவை நீர் திறப்பு உள்ளிட்ட ஒவ்வொரு விவகாரத்திற்கும் தனித்தனியாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்கும் வரை சட்டப் போராட்டம் தொடரும். ஒவ்வொரு ஆண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே கர்நாடகா தண்ணீர் திறந்துவிடும் நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு தேவை என்பதற்காகவே இந்த வழக்கு தொடரப்படும்.

    கர்நாடகா

    அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து பேசிய அமைச்சர், சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பின்னர் சில கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அத்தகைய சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்ற ஒரே நிலைப்பாட்டில் உள்ளது.

    Advertisement

    தமிழக அரசு

    ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் தமிழக அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்பதற்குப் பதிலாக கர்நாடகாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. குறிப்பாக, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளித்த பிறகு அதே விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடிய எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை முரண்பாடானது. தமிழகத்திற்கு தேவையான நீரை பெற்றுத்தர சட்டம், நிர்வாகம், பேச்சுவார்த்தை உள்ளிட்ட அனைத்து வழிகளையும் முதலமைச்சர் ஆராய்ந்து வருகிறோம்.

    மின் இணைப்புகள்

    தற்போதைக்கு கர்நாடக முதலமைச்சரை சந்திப்பதற்கான சூழல் இல்லை என்றாலும், தேவையான நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் சுமார் 17 ஆயிரம் மின் இணைப்புகளில் மீட்டர் ரீடிங் சரிபார்க்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 100 இணைப்புகளில் மட்டுமே சிறிய அளவிலான வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலானவை வீடுகள் பூட்டியிருந்ததால் மதிப்பீட்டு (Approximate) கணக்கீடு செய்யப்பட்ட சம்பவங்களே என்றும், பரவலான முறைகேடு எதுவும் இல்லை.

    Advertisement

    200 யூனிட் இலவசம்

    மின்கட்டணம் அதிகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம். அடிப்படை கட்டண விகிதங்களில் புதிய உயர்வு எதுவும் செய்யப்படவில்லை. 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. பயன்பாட்டு அளவுக்கு ஏற்ப ஸ்லாப் அடிப்படையில் கட்டண வித்தியாசம் ஏற்படுவதை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். இதுவரை சுமார் 73 ஆயிரம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    பட்ஜெட்டில் அறிவிப்புகள்

    நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து பட்ஜெட்டில் உரிய அறிவிப்புகள் வெளியாகும். மின்சார வாரியத்தின் செயலி, மீட்டர் ரீடிங், கட்டண வசூல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் டிஜிட்டல் முறையில் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவிரி உரிமை விவகாரத்தில் தமிழக மக்களின் நலனே அரசின் முன்னுரிமை . அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்" என்றார்.

    English Summary

    CTR Nirmal Kumar accuses opposition of backing Karnataka and vows Supreme Court action on Cauvery water dispute.