சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது வருத்தம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். எல்லோரையும் ஒருங்கிணைத்து அதிமுகவை வழி நடத்தினால் அதிமுக மீண்டு வரும் என்று கூறிய சிவி சண்முகம், அனைவரும் கலந்து ஆலோசித்து எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 3வது இடம் பிடித்து படுதோல்வியை சந்தித்துள்ளது. 5 மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் அதிமுக வென்ற நிலையில், தற்போது அதே தொகுதியில் தோல்வி அடைந்திருக்கிறது. இதனால் அதிமுகவின் கட்டமைப்பு அப்படியே தவெக பக்கம் நகர்ந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனிடையே அதிமுக தோல்விக்கு பின் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருக்கின்றனர். தொடர்ந்து ஆலோசனைகள் நடப்பதால், அதிமுகவில் மீண்டும் புதிய அணி உருவாகுமா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. இந்த நிலையில் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இரு தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இதுவொரு மோசமான தோல்வி. அதிமுகவின் இந்த தோல்வி மன வருத்தத்தை கொடுக்கிறது. அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை தேவை. அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். இதன் மூலமாக மட்டுமே கட்சியை மீட்டெடுக்கலாம். அதிமுகவில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. அதிமுகவில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் கலந்து பேசி முடிவு செய்தால், நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க தயார். அதேபோல் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மை. அதனை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இந்த இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக தலைமை கலந்து ஆலோசிக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து முடிவுகள் எடுக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்தால் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர முடியும் என்று தெரிவித்துள்ளார்.